கோடை சீசனையொட்டி கூடலூர்– மைசூர் சாலையில் இரவு நேர போக்குவரத்து அனுமதிக்கப்படுமா?


கோடை சீசனையொட்டி கூடலூர்– மைசூர் சாலையில் இரவு நேர போக்குவரத்து அனுமதிக்கப்படுமா?
x
தினத்தந்தி 3 May 2017 10:30 PM GMT (Updated: 3 May 2017 7:11 PM GMT)

கோடை சீசனையொட்டி கூடலூர்– மைசூர் செல்லும் சாலையில் இரவு நேர போக்குரத்து அனுமதிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்து உள்ளனர்.

கூடலூர்,

தமிழகம்– கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்கள் இணையும் பகுதியில் கூடலூர் அமைந்து உள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் நகராக கூடலூர் திகழ்கிறது. மேலும் முதுமலை, முத்தங்கா, பந்திப்பூர் என 3 மாநிலங்களின் சரணாலயங்களும் அருகருகே உள்ளன. இந்த நிலையில் மைசூரில் இருந்து குண்டல்பேட், முதுமலை, கூடலூர் வழியாக ஊட்டி, மேட்டுப்பாளையத்துக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.

இதனால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், சரக்கு லாரிகள் தேசிய நெடுஞ்சாலை வழியாக இயக்கப்படுகிறது. மேலும் கர்நாடகாவில் இருந்து காய்கறி, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் குண்டல்பேட்டில் இருந்து முத்தங்கா சரணாலயம் வழியாக சுல்தான்பத்தேரி, கோழிக்கோடு மற்றும் முதுமலை சரணாலயம், கூடலூர் வழியாக மலப்புரம், திருச்சூருக்கு சரக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் 3 மாநிலங்களையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையாக விளங்குகிறது.

இரவு நேர போக்குவரத்துக்கு தடை

இந்த நிலையில் கடந்த 2009–ம் ஆண்டு கர்நாடகா மாநில ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. அதாவது சரணாலய பகுதியில் இரவு நேரத்தில் வாகன போக்குவரத்துக்கு அனுமதிப்பதால் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் பந்திப்பூர் சரணாலய பகுதியில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை தினமும் மூட உத்தரவிட்டது. இதையொட்டி கர்நாடகா வனத்துறையினர் இரவில் வாகன போக்குவரத்து அனுமதிப்பது இல்லை.

ஆனால் அரசு பஸ்கள் இயக்கி கொள்ளலாம் என நீதிமன்றம் விதிவிலக்கு அளித்தது. இருப்பினும் இரவு நேர போக்குவரத்து அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டதால் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பந்திப்பூர் சரணாலயம் வழியாக செல்லும் சாலை இரவில் மூடப்படுவதால் முதுமலை புலிகள் காப்பக பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டது. இதனால் இரவில் வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்க கூடலூர் தொரப்பள்ளி முதல் கக்கநல்லா வரையிலான முதுமலை புலிகள் காப்பக சாலையும் மூடப்பட்டது.

மலர் கண்காட்சி

இதனால் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை கடந்து வரக்கூடிய வாகனங்கள் கூடலூர் தொரப்பள்ளி பஜாரில் இரவில் நிறுத்தி வைக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. இதனால் இரவு நேர போக்குவரத்துக்கு அனுமதிக்க வேண்டும் என பல்வேறு கட்ட போராட்டங்கள் நீலகிரி மாவட்டம் முழுவதும் நடைபெற்றது. ஆனால் இதுவரை இரவு நேர போக்குவரத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் மலர் கண்காட்சி, கோடை சீசன் களை கட்டி உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்து செல்கின்றனர்.

குறிப்பாக அண்டை மாநிலங்களில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருவதால் வாகன நெருக்கடி ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் பல மணி நேரம் பயணம் செய்ய வேண்டிய நிலையில் சுற்றுலா பயணிகள் உள்ளனர். மேலும் ஊட்டியில் இருந்து கூடலூர் வரை மலைப்பாதையில் வாகனங்களை வேகமாக இயக்க முடியாத சூழலும் காணப்படுகிறது.

இதனால் இரவு 9 மணிக்குள் முதுமலையை கடந்து செல்ல வேண்டிய நிலை சுற்றுலா பயணிகளுக்கு ஏற்பட்டு உள்ளது. மேலும் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த பகுதி என்பதால் இரவில் சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மன உளைச்சல்

ஊட்டி– கூடலூர் இடையே மலைப்பாதையில் தினமும் ஏராளமான வாகன விபத்து நடைபெறுகிறது. எனவே சுற்றுலா பயணிகளின் மன உளைச்சலை தவிர்க்க கூடலூர்– மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கோடை சீசன் நிறைவு பெறும் வரை இரவு நேர போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க தமிழக– கர்நாடகா அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆண்டுதோறும் கோடை சீசன் நடைபெறுவதால் சுற்றுலா பயணிகளின் நலனில் கருத்தில் கொண்டு நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story