பூந்தமல்லியில் நகராட்சி அலுவலக புதிய கட்டிடம் கட்ட 19 கடைகள் இடிப்பு அதிகாரிகளுடன், கடைக்காரர்கள் வாக்குவாதம்


பூந்தமல்லியில் நகராட்சி அலுவலக புதிய கட்டிடம் கட்ட 19 கடைகள் இடிப்பு அதிகாரிகளுடன், கடைக்காரர்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 3 May 2017 10:30 PM GMT (Updated: 3 May 2017 8:38 PM GMT)

பூந்தமல்லியில் நகராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட 19 கடைகள் இடித்து அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் கடைக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி,

பூந்தமல்லி டிரங்க் ரோட்டில் நகராட்சிக்கு சொந்தமான 19 கடைகள் இருந்தன. இங்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டியும் இருந்தது.

அந்த இடத்தில் ரூ.3 கோடியில் பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்துக்கு புதிதாக கட்டிடம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இதற்காக மேல்நிலை நீர்தேக்க தொட்டி கடந்த ஆண்டு தகர்க்கப்பட்டது. 19 கடைகளை காலி செய்யும்படி கடைக்காரர்களுக்கு நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதை ஏற்று சிலர் கடைகளை காலி செய்தனர்.

ஆனால் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இடைக்கால தடை பெற்றனர். எனினும் பின்னர் நகராட்சிக்கு சாதகமாக கோர்ட்டில் தீர்ப்பு வந்தது.

வாக்குவாதம்

இதையடுத்து நேற்று கடைகளை அகற்ற நகராட்சிகளின் மண்டல இயக்குனர் இளங்கோவன், நகராட்சி கமிஷனர் சித்ரா ஆகியோர் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் அங்கு சென்றனர். அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சில கடைக்காரர்கள் தாமாக முன்வந்து கடைகளை காலி செய்து விட்டு பொருட்களை ஏற்றிச் சென்றனர். சிலர் கடைகளை காலி செய்ய மறுத்ததுடன், நகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடைகள் அகற்றம்

உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். அந்த கடைகளில் இருந்த பொருட்களை நகராட்சி ஊழியர்களே அகற்றி வேனில் ஏற்றிச் சென்றனர்.

பின்னர் பொக்லைன் எந்திரங்கள் மூலம் 19 கடைகளும் இடித்து அகற்றப்பட்டன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இன்று (வியாழக்கிழமை) முதல் அந்த இடத்தில் நகராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கும் என நகராட்சி கமிஷனர் சித்ரா தெரிவித்தார். அப்போது நகராட்சி பொறியாளர் முத்துக்குமார், வருவாய் ஆய்வாளர் கோவிந்தராஜ், சுகாதார ஆய்வாளர் சாமுவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Next Story