மணல் கடத்தல்; 18 லாரிகள் சிக்கின ஒரு பொக்லைன் எந்திரமும் பிடிபட்டது


மணல் கடத்தல்; 18 லாரிகள் சிக்கின ஒரு பொக்லைன் எந்திரமும் பிடிபட்டது
x
தினத்தந்தி 3 May 2017 10:45 PM GMT (Updated: 3 May 2017 8:40 PM GMT)

மணல் கடத்தல் தொடர்பாக 18 லாரிகள் சிக்கின. ஒரு பொக்லைன் எந்திரமும் பிடிபட்டது.

காஞ்சீபுரம்,

வேலூர் பாலாற்றில் இருந்து சென்னைக்கு காஞ்சீபுரம் வழியாக கனரக லாரிகளில் மணல் கடத்தப்படுவதாக காஞ்சீபுரம் சப்–கலெக்டர் அருண் தம்புராஜ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையொட்டி நேற்று அதிகாலை காஞ்சீபுரத்தை அடுத்த சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பாலுச்செட்டிசத்திரம் முதல் சிட்டியம்பாக்கம் வரை சப்–கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் வருவாய்த்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது வேகமாக வந்த 13 லாரிகளை வருவாய்த்துறையினர் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அதில் சென்னைக்கு மணல் கடத்தப்படுவது தெரியவந்தது. உடனடியாக மணலுடன் 13 லாரிகளை சப்–கலெக்டர் அருண்தம்புராஜ் கைப்பற்றினார்.

ஆரணி மற்றும் கொசஸ்தலை ஆறு

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள ஆரணி ஆறு மற்றும் கொசஸ்தலை ஆற்றில் இருந்து மணல் கடத்தப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லிக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் திருவள்ளூர் சப்–கலெக்டர் திவ்யஸ்ரீ தலைமையில் வருவாய்த்துறையினர் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பெரியபாளையத்தை அடுத்த எர்ணாகுப்பம் கிராமத்தில் ஆரணி ஆற்றில் இருந்து மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 லாரிகளையும், கொசஸ்தலை ஆற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 லாரிகள், ஒரு பொக்லைன் எந்திரம் என்று மொத்தம் 6 வாகனங்களை கைப்பற்றினர். அந்த வாகனங்கள் பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.


Next Story