போலீசார் தாக்கியதில் சிறுவன் இறந்ததாக அனைத்து கட்சியினர் போராட்டம்


போலீசார் தாக்கியதில் சிறுவன் இறந்ததாக அனைத்து கட்சியினர் போராட்டம்
x
தினத்தந்தி 30 May 2017 11:00 PM GMT (Updated: 2017-05-31T03:33:10+05:30)

மணப்பாறையில் போலீசார் தாக்கியதில் சிறுவன் இறந்ததாக கூறி, அனைத்து கட்சியினர் போராட்டம் நடத்தினர். எரிவாயு தகன மேடையை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள கோவிந்தராஜபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் கடந்த 25-ந் தேதி மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுயநினைவில்லாத நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான். அந்த சிறுவனை திருட்டு வழக்கு தொடர்பாக 24-ந் தேதி விசாரணைக்காக அழைத்துச் சென்ற மணப்பாறை போலீசார் தாக்கியதில் தான் அவனுடைய நிலை கவலைக்கிடமானதாக கூறி, நூற்றுக்கணக்கானோர் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை முன்பு திரண்டனர்.

இதையடுத்து சிறுவனை மேல் சிகிச்சைக்காக அன்று மாலையே திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு சிறுவன் உயிரிழந்தான்.

போலீஸ் நிலையம் முன் போராட்டம்

இதையடுத்து சிறுவனின் உடலை வீட்டுக்கு எடுத்து வந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த தி.மு.க., ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் சிறுவனின் உடலை பார்த்து விட்டு, போலீஸ் நிலையம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, மணப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் 3 போலீசார் தாக்கியதில் தான் சிறுவன் உயிரிழந்தான் என்றும், சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் மீது போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்வோம் என்று மிரட்டியதால் அவர்கள் இது தொடர்பாக புகார் ஏதும் கொடுக்கவில்லை என்றும், எனவே இதுகுறித்து உடனடியாக நீதி விசாரணை நடத்தி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியும், போலீஸ் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புகார் மனு

இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இந்த பிரச்சினை தொடர்பாக இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் 3 போலீசார், இறந்த சிறுவனின் தாய்மாமன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஆசைத்தம்பியிடம் ம.தி.மு.க. மாநில மாணவரணி செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் புகார் மனு கொடுத்தார்.

ஆனால் புகார் மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அனைத்து கட்சி நிர்வாகிகள், சிறுவனின் உடல் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட புறப்பட்டனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்தனர். இதற்கிடையே சிறுவனின் உடல் எரியூட்டுவதற்காக மணப்பாறை நகராட்சிக்கு சொந்தமான எரிவாயு தகன மேடைக்கு கொண்டு செல்லப்பட்டது.

தகன மேடை முற்றுகை

இதையறிந்த அனைத்து கட்சியினர் உடனடியாக நகராட்சி எரிவாயு தகன மேடைக்கு சென்றனர். அங்கு வெளியில் பூட்டப்பட்டிருந்ததால் தகன மேடையை முற்றுகையிட்டனர். அங்கு இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சிறுவனை அடித்துக் கொன்றதோடு மட்டுமின்றி, விசாரணை கோரியவர்களை மிரட்டுவதா? என்று கூறி இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் பூட்டப்பட்டிருந்த கதவின் மீது கல்வீசினர். சிலர் எரிவாயு தகன மேடையின் சுவரை ஏறிக் குதித்து உள்ளே சென்றனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு நடராஜ் மற்றும் அதிரடிப்படை போலீசார் எரிவாயு தகன மேடை பகுதிக்கு வந்து, அங்கிருந்தவர்களை விரட்டி அடிக்க முயன்றனர். இதனால் மீண்டும் போலீசாருக்கும்- அனைத்து கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும் அங்கிருந்தவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதை யடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறுவன் உடல் எரியூட்டப்பட்டது.

இதையடுத்து அனைத்து கட்சியினர் மீண்டும் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, மணவை தமிழ் மாணிக்கம் அளித்த புகாரைப் பெற்றுக் கொண்டு விசாரணைக்காக ஸ்ரீரங்கம் கோட்டாட்சி தலைவருக்கு அனுப்பி வைப்பதாக கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று காலை முதல் மதியம் வரை மணப்பாறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story