தினமும் யோகா செய்வது வாழ்க்கை முறையை சீராக்கும் கலெக்டர் ராமன் பேச்சு


தினமும் யோகா செய்வது வாழ்க்கை முறையை சீராக்கும் கலெக்டர் ராமன் பேச்சு
x
தினத்தந்தி 21 Jun 2017 10:30 PM GMT (Updated: 21 Jun 2017 1:48 PM GMT)

தினமும் யோகா செய்வது வாழ்க்கை முறையை சீராக்கும் என்று சர்வதேச யோகா தின நிகழ்ச்சியை தொடங்கி வைத்து கலெக்டர் ராமன் பேசினார்.

வேலூர்,

தினமும் யோகா செய்வது வாழ்க்கை முறையை சீராக்கும் என்று சர்வதேச யோகா தின நிகழ்ச்சியை தொடங்கி வைத்து கலெக்டர் ராமன் பேசினார்.

சர்வதேச யோகா தினம்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நேற்று காலை வேலூர் மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயாராவ் தலைமை தாங்கினார். கலெக்டர் ராமன் யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.

இதில் பள்ளி, கல்லூரி மாணவ– மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு யோகா செய்தனர். அதைத்தொடர்ந்து இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் கோட்டை மைதானத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செஞ்சிலுவை சங்க மாவட்ட தலைவர் இந்தர்நாத் தலைமை தாங்கினார். கலெக்டர் ராமன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து தனது மனைவி மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ– மாணவிகளுடன் சேர்ந்து யோகா செய்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:–

வாழ்க்கை முறையை சீராக்கும்

ஐ.நா.சபை கடந்த 2015–ம் ஆண்டு யோகாவை சர்வதேச தினமாக பிரகடனம் செய்தது. அதன்படி கடந்த 3 ஆண்டுகளாக ஜூன் மாதம் 21–ந் தேதி உலக யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்தும் யோகா தினத்தை கொண்டாடி வருகிறது. இதில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமின்றி சாமானிய மக்களும், சித்தர்கள் செய்து வந்த இந்த கலையை செய்து வருகிறார்கள்.

இதை ஒரு நாள் மட்டும் செய்தால் போதாது, தினமும் செய்தால் நாம் குழந்தையை போன்று குதூகலமாக இருக்கலாம். எந்த மதத்தினரும், எந்த வயதினரும் இதை செய்யலாம். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் வாழ்க்கை முறையை யோகா சீராக்கும். மாணவ– மாணவிகளும் இதை உணர்ந்து தினமும் யோகா செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், வருவாய் கோட்ட அலுவலர் செல்வராஜ், ஓட்டல்கள் சங்க மாநில தலைவர் எம்.வெங்கடசுப்பு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story