கிணற்றில் இருந்து மேலே வந்தபோது கயிறு அறுந்து விழுந்து 2 தொழிலாளர்கள் பலி


கிணற்றில் இருந்து மேலே வந்தபோது கயிறு அறுந்து விழுந்து 2 தொழிலாளர்கள் பலி
x
தினத்தந்தி 21 Jun 2017 10:15 PM GMT (Updated: 21 Jun 2017 5:01 PM GMT)

மொரப்பூர் அருகே கிணறு தோண்டும் பணி முடிந்து மேலே வந்த போது கயிறு அறுந்து விழுந்து 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.

மொரப்பூர்,

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள பனைமரத்துபட்டியை சேர்ந்தவர் துரைசாமி, விவசாயி. இவர் தோட்டத்தில் புதிதாக கிணறு தோண்டி வருகிறார். இந்த பணியில் கல்லடிப்பட்டியை சேர்ந்த தொழிலாளர்கள் மாணிக்கம் (வயது55), தவமணி(47) உள்ளிட்ட 6 பேர் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் மாலை கிணறு தோண்டும் பணி முடிந்து தொழிலாளர்கள் மண் அள்ளும் கூடையில் கயிறு மூலம் கிணற்றில் இருந்து மேலே வந்தனர்.

அப்போது மாணிக்கம், தவமணி ஆகியோர் மேலே வந்தபோது திடீரென கயிறு அறுந்து கூடையுடன் கிணற்றில் விழுந்தது. இதில் தொழிலாளர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதனால் மற்ற தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கிராமமக்கள் மற்றும் இறந்தவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் கிணற்று பகுதிக்கு விரைந்து வந்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து மொரப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் இருந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் விழுந்து தொழிலாளர்கள் 2 பேர் இறந்த சம்பவம் இந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story