ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகளில் திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம்


ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகளில் திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 21 Jun 2017 10:30 PM GMT (Updated: 21 Jun 2017 5:01 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகளில் விவரங்களை திருத்தம் செய்ய இ–சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் விவேகானந்தன் தெரிவித்து உள்ளார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ரே‌ஷன்கார்டுகளுக்கு பதிலாக புதிய மின்னணு ரே‌ஷன்கார்டுகளை தமிழகஅரசின் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வழங்கி வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் 3 லட்சத்து 98 ஆயிரத்து 108 ரே‌ஷன்கார்டுகள் உள்ளன. இவற்றில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 314 ரே‌ஷன்கார்டுகள் தயார் நிலையில் உள்ளன. இவற்றில் 1 லட்சத்து 65 ஆயிரத்து 360 ரே‌ஷன்கார்டுகள் வினியோகிக்கப்பட்டு உள்ளன.

ஏற்கனவே பெறப்பட்ட மின்னணு ரே‌ஷன்கார்டு தொலைந்து போயிருந்தாலோ, அல்லது சேதமடைந்து பயன்படுத்தப்படாத நிலையில் இருந்தாலோ தமிழ்நாடு கேபிள் டி.வி.நிறுவனத்தின் இ–சேவை மையங்களில் ரூ.30 கட்டணம் செலுத்தி புதிய மாற்று மின்னணு ரே‌ஷன்கார்டை பெற்றுக்கொள்ளலாம். இதற்கு பழைய ரே‌ஷன்கார்டு பதிவு செய்துள்ள செல்போன் எண்ணை தெரிவிக்க வேண்டும். அந்த எண்ணுக்கு ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் அனுப்பப்படும். அந்த கடவுச்சொல்லை பயன்படுத்தி புதிய மின்னணு ரே‌ஷன்கார்டு வழங்கப்படும். பழைய ரே‌ஷன்கார்டு பதிவு செய்த செல்போன் எண் தெரியாதவர்களுக்கு இ–சேவை மையங்களில் புதிய மின்னணு ரே‌ஷன்கார்டு வழங்க இயலாது.

ஒப்புதல்

தர்மபுரி மாவட்டத்தில் புதிய மின்னணு ரே‌ஷன்கார்டில் உள்ள விவரங்களை திருத்தங்கள் செய்யும் பணி மேற்கூறிய இ–சேவை மையங்களில் தற்போது நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் மின்னணு ரே‌ஷன்கார்டுகளில் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை நீக்குதல், ரே‌ஷன்கார்டின் வகை மாற்றம் செய்தல், சிலிண்டர்களின் விவரத்தினை மாற்றம் செய்தல், குடும்பதலைவர் பெயரை மாற்றம் செய்தல், முகவரி மாற்றம் செய்தல் ஆகிய சேவைக்காக இ–சேவை மையங்களில் ரூ.60 செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு வரும் விண்ணப்பங்களுக்கு வட்ட வழங்கல் அலுவலர் ஒப்புதல்அளித்த பிறகு விண்ணப்பதாரரின் செல்போன் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும். அந்த எஸ்.எம்.எஸ். கிடைக்கப்பெற்ற பிறகு அருகில் உள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் இ–சேவை மையங்களை அணுகி திருத்தப்பட்ட மின்னணு ரே‌ஷன்கார்டுகளை ரூ.30 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் விவேகானந்தன் தெரிவித்து உள்ளார்.


Next Story