சுங்க கட்டணம் செலுத்த மறுத்து சாலை பணியாளர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு


சுங்க கட்டணம் செலுத்த மறுத்து சாலை பணியாளர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 21 Jun 2017 10:15 PM GMT (Updated: 21 Jun 2017 5:56 PM GMT)

அய்யலூர் அருகே சுங்க கட்டணம் செலுத்த மறுத்து சாலை பணியாளர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வடமதுரை,

சென்னையில் நடைபெற்ற தனியார் மய எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொள்ள, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் 3 வேன்களில் சென்றனர். மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு பின்னர் அவர்கள், நேற்று முன்தினம் மீண்டும் சென்னையில் இருந்து விருதுநகருக்கு திரும்பினர்.

திண்டுக்கல்– திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யலூர் அருகே உள்ள பொன்னம்பலப்பட்டி சுங்கச்சாவடியில் வேன்கள் வந்து கொண்டிருந்தன. அப்போது சுங்கச்சாவடி ஊழியர்கள் வாகனங்களுக்கு கட்டணம் செலுத்துமாறு கேட்டுள்ளனர். அதற்கு வேனில் வந்த சாலை பணியாளர்கள் கட்டணம் செலுத்த மறுத்து, தங்களை இலவசமாக அனுமதிக்குமாறு கூறி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும் சுங்கச்சாவடி ஊழியர்கள், கட்டணம் செலுத்தாமல் வாகனங்கள் செல்ல அனுமதிக்க முடியாது என்று கூறினர்.

சாலை மறியல்

இதனால் ஆத்திரம் அடைந்த சாலை பணியாளர்கள் அங்கு மறியலில் ஈடுபட்டனர். பின்னர் இதுகுறித்து சுங்கச்சாவடி உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் அங்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் வாகனங்களை இலவசமாக செல்ல அனுமதித்தனர்.

இதையடுத்து அவர்கள் வேன்களில் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் கடந்த வாரம் தமிழ்புலிகள் அமைப்பினர் இலவச அனுமதி கேட்டு சுங்கச்சாவடி ஊழியர்களை தாக்கியது குறிப்பிடத்தக்கது.


Next Story