வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் ஜூலை 1–ந்தேதி முதல் ஒரு மாதம் நடக்கிறது


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் ஜூலை 1–ந்தேதி முதல் ஒரு மாதம் நடக்கிறது
x
தினத்தந்தி 21 Jun 2017 11:30 PM GMT (Updated: 21 Jun 2017 6:08 PM GMT)

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் வருகிற ஜூலை மாதம் 1–ந்தேதி முதல் ஒரு மாதம் நடக்கிறது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுந்தரவல்லி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை தொடங்கி வைத்து கலெக்டர் கூறியதாவது.,

திருவள்ளூர் மாவட்டத்தில் தகுதி வாய்ந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் அதிக அளவில் சேர்த்தல் மற்றும் பிழைகளை நீக்கும் பொருட்டு வருகிற 1–7–2017 முதல் 31–7–2017 வரை சிறப்பு முகாம் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த சிறப்பு முகாமில் குறிப்பாக இளைய வாக்காளர்களான 18 வயது முதல் 21 வயது வரையானவர்களை பட்டியலில் சேர்க்க தற்போது நடைபெறும் தொடர் திருத்த காலத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

3 ஆயிரத்து 246 வாக்குச்சாவடிகள்

 வருகிற 9–7–2017 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 23–7–2017 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு தினங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் நடைபெறும். சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் படிவங்களை பெற்றுக்கொள்வார்கள். சிறப்பு முகாம் நாட்களான 9–7–2017 மற்றும் 23–7–2017 ஆகிய இரு தினங்களில் அந்தந்த வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரால் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்களும் ஒருங்கிணைந்து வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகள், விடுதல்கள் போன்றவற்றை கண்டறிய வேண்டும். 

திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் 302 வாக்குச்சாவடிகளும், பொன்னேரியில் 291 வாக்குச்சாவடிகளும், திருத்தணியில் 304 வாக்குச்சாவடிகளும், திருவள்ளூரில் 287 வாக்குச்சாவடிகளும், பூந்தமல்லியில் 351 வாக்குச்சாவடிகளும், ஆவடியில் 383 வாக்குச்சாவடிகளும், மதுரவாயலில் 361 வாக்குச்சாவடிகளும், அம்பத்தூரில் 322 வாக்குச்சாவடிகளும், மாதவரத்தில் 353 வாக்குச்சாவடிகளும், திருவொற்றியூரில் 292 வாக்குச்சாவடிகள் என மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்து 246 வாக்குச்சாவடிகள் உள்ளன. 

கல்லூரிகளில் 
சிறப்பு முகாம்கள்

18 வயது பூர்த்தியடைந்த மாணவர்களையும், விடுபாடின்றி வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பொருட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் வருகிற 5–7–2017 (புதன்கிழமை) மற்றும்  19–7–2017 (புதன்கிழமை) ஆகிய இரு தினங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களில் அனைத்து கல்லூரிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் படிவங்களை பெற்றுக்கொள்வார்கள். இது வரை தங்கள் கட்சியால் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் நியமிக்கப்படாத வாக்குச்சாவடிகள் ஏதேனும் இருப்பின் அவற்றிற்கு உடனே வாக்குச்சாவடி நிலை முகவர்கள் நியமித்து சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் துணைத்தேர்தல் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.  

இவ்வாறு அவர் கூறினார்.

 இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கே.முத்து, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் மணிலா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் திரளான அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Next Story