பாவூர்சத்திரம் அருகே பரிதாபம் டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி சாவு


பாவூர்சத்திரம் அருகே பரிதாபம் டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி சாவு
x
தினத்தந்தி 21 Jun 2017 9:00 PM GMT (Updated: 21 Jun 2017 6:19 PM GMT)

பாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி பரிதாபமாக இறந்தாள்.

நெல்லை,

பாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி பரிதாபமாக இறந்தாள்.

டெங்கு காய்ச்சல்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 6 மாதங்களாக டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகளவில் உள்ளது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 200–க்கும் மேற்பட்டவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 25–க்கும் மேற்பட்டவர்கள் இறந்து உள்ளனர்.

நெல்லை மாவட்டத்தின் மேற்கு பகுதியான ஆலங்குளம், அம்பை, தென்காசி, கடையநல்லூர், பாவூர்சத்திரம், கடையம், சுரண்டை ஆகிய பகுதிகளில் இந்த காய்ச்சலின் பாதிப்பு அதிகளவில் உள்ளது. பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள மயிலப்புரம், சிவநாடானூர், மேட்டூர், புலவனூர், வெய்காலிப்பட்டி ஆகிய பகுதிகளில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகளவில் உள்ளது. இந்த ஊர்களை சேர்ந்த 60–க்கும் மேற்பட்டவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சிறுமி சாவு

குறிப்பாக இந்த பகுதியில் உள்ள குழந்தைகள் அதிகளவில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். குழந்தைகள் வார்டில் மட்டும் 85 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி இறந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:–

பாவூர்சத்திரம் அருகே உள்ள அழகம்பெருமாளூர் காமராஜ்நகரை சேர்ந்த ரமேஷ் மகள் சுருதிகா (வயது 8). இவள் ஆவுடையானூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3–ம் வகுப்பு படித்து வந்தாள். இவள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பாவூர்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாள். பின்னர் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 15–ந்தேதி அனுமதிக்கப்பட்டாள். அங்கு சிகிச்சை பலனின்றி சுருதிகா நேற்று காலையில் பரிதாபமாக இறந்தாள்.

டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story