வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வாய்ப்பு: புதிய தொழில்கள் தொடங்குவதற்கு கடன் பெற விண்ணப்பிக்கலாம்


வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வாய்ப்பு: புதிய தொழில்கள் தொடங்குவதற்கு கடன் பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 21 Jun 2017 10:30 PM GMT (Updated: 21 Jun 2017 6:50 PM GMT)

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிய தொழில்கள் தொடங்குவதற்கு வாய்ப்பளிக்கும் வகையில், கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சங்கர் தெரிவித்து உள்ளார்.

ஊட்டி

தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் நகர பகுதிகளில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் யூ.ஓய்.இ.ஜி.பி. என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி தொழில்களை அதிகபட்சம் ரூ.10 லட்சம் முதலீட்டிலும், சேவை தொழில்களை அதிகபட்சம் ரூ.3 லட்சம் முதலீட்டிலும், வியாபார தொழில்களை அதிகபட்சம் ரூ.1 லட்சம் முதலீட்டிலும் தொடங்கலாம். மேற்கண்ட மனுதாரர்களுக்கு அரசால் 25 சதவீத மானியத்துடன் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கடனாக வழங்கப்படும். தொழில் தொடங்கும் பொதுப்பிரிவினர் திட்ட மதிப்பில் 10 சதவீதம் முதலீடு செய்ய வேண்டும். சிறப்பு பிரிவினரான பட்டியல் இடப்பட்ட (பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள்) இனத்தவர்கள் 5 சதவீதம் முதலீடு செய்ய வேண்டும். மீதம் உள்ள முதலீட்டு தொகை வங்கி கடனாக வழங்கப்படும்.

விண்ணப்பங்கள்

இந்த திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க 18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். தொழில் கடன்கள் பெறுவதற்கு சொத்து பிணையம் தேவையில்லை. மேலும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் பொதுப்பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 35 ஆகவும், சிறப்பு பிரிவினருக்கு 45 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விண்ணப்பதாரர் குறைந்த பட்சம் 8–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் ஷ்ஷ்ஷ்.பீவீநீஷீஷீtஹ்.நீஷீனீ (0000) என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் கூடிய புகைப்படம், தாங்களே தயாரித்த திட்ட அறிக்கை, கல்விச்சான்று, இனம், முன்னாள் ராணுவ வீரர் மற்றும் மாற்றத்திறனாளிகளுக்கான சான்று நகல்களுடன் 2 நகல்களில் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், எல்க் ஹில் ரோடு, நீலகிரி–643006 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

புதிய தொழில்கள்

மேலும் இந்த திட்டத்தின் கீழ் அடுமனை பொருட்கள், சாக்லேட், சணல் பைகள், அழகு நிலையம், பாக்குமட்டை தட்டு தயாரித்தல், மளிகைக்கடை, ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, லேத் ஓர்க் ஷாப், சமையல் பாத்திரங்கள் வாடகை, இருசக்கர வாகனங்கள் பழுது பார்த்தல் உள்ளிட்ட தொழில்கள் தொடங்க சாத்தியக்கூறுகள் உள்ளன. இந்த திட்டத்தினை பயன்படுத்தி, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிய தொழில்களை தொடங்கி பயனடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story