ராமநத்தம் அருகே டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


ராமநத்தம் அருகே டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Jun 2017 10:30 PM GMT (Updated: 21 Jun 2017 7:16 PM GMT)

ராமநத்தம் அருகே டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திட்டக்குடி,

தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரத்தில் இருந்த டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று சென்னை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன்படி ராமநத்தம்–தொழுதூர் நெடுஞ்சாலையில் இருந்த 2 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

இந்த கடைகளுக்கு பதிலாக அதே பகுதியில் உள்ள இடத்தை தேர்வு செய்து அதில் டாஸ்மாக் கடை அமைப்பதற்காக அதிகாரிகள் முடிவு செய்தனர். மேலும் கடை அமைப்பதற்கான கொட்டகையும் அமைக்கப்பட்டது. இதற்கு தொழுதூர், ராமநத்தம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இருப்பினும் கடை அமைப்பதற்கான முயற்சியை அதிகாரிகள் கைவிடவில்லை.

ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் நேற்று காலையில் அந்த டாஸ்மாக் கடை திறக்க இருப்பதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்தது. இதையறிந்த அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடைக்கு திரண்டு வந்தனர். தொடர்ந்து அவர்கள் இங்கு கடையை திறக்கக்கூடாது எனக்கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மங்களூர் ஒன்றிய முன்னாள் தி.மு.க. செயலாளர் சின்னசாமி தலைமை தாங்கினார். கடலூர் மேற்கு மாவட்ட வன்னியர் சங்க தலைவர் உதயக்குமார், பா.ம.க. ஒன்றிய செயலாளர் அருளேசன், ஒன்றிய தி.மு.க. இளைஞரணி செயலாளர் ராமகிருஷ்ணன், பா.ம.க. நீலாராம் ரமேஷ், கட்டபஞ்சாயத்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோவிந்தசாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என கண்டன கோ‌ஷங்களை எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த தாசில்தார் செல்விஅம்மாள் மற்றும் ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஆர்ப்பாட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எந்த உத்தரவும் பெறப்படவில்லை. எனவே இங்கு டாஸ்மாக் கடைகளை திறக்கமாட்டோம் என அதிகாரிகள் கூறினர். இதையேற்ற அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story