அ.தி.மு.க. பிரமுகர் மகன் கொலை வழக்கு: உசிலம்பட்டி கோர்ட்டில் 3 பேர் சரண்


அ.தி.மு.க. பிரமுகர் மகன் கொலை வழக்கு: உசிலம்பட்டி கோர்ட்டில் 3 பேர் சரண்
x
தினத்தந்தி 21 Jun 2017 11:30 PM GMT (Updated: 21 Jun 2017 7:40 PM GMT)

அ.தி.மு.க. பிரமுகர் மகன் கொலை வழக்கில் உசிலம்பட்டி கோர்ட்டில் 3 பேர் சரண் அடைந்தனர்.

உசிலம்பட்டி,

மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல முன்னாள் தலைவராக இருந்தவர் ராஜபாண்டியன்(அ.தி.மு.க.). இவருக்கும், காமராஜர்புரத்தை சேர்ந்த முன்னாள் மண்டல தலைவர் வி.கே. குருசாமிக்கும் (தி.மு.க.) முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் அவர்களுக்கு இடையே நடந்து வரும் மோதல் காரணமாக இருதரப்பிலும் பலர் மாறி, மாறி கொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் ராஜபாண்டியன் மகன் தொப்பிலி என்ற முனியசாமியை கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த அரியமங்களம் வனப்பகுதிக்கு சிலர் கடத்தி சென்று கொலை செய்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வி.கே.குருசாமியின் மகன் வி.கே.ஜி.மணி, அவருடைய உறவினர் பழனிமுருகன் ஆகியோரை கைது செய்திருந்தனர். மேலும் சிலரை தேடி வந்தனர்.

3 பேர் சரண்

இந்த நிலையில் நேற்று இந்த கொலை வழக்கு சம்பந்தமாக மதுரை கீரைத்துறையை சேர்ந்த கணக்கன் என்ற முனியசாமி(வயது 50), மதுரை தெப்பக்குளத்தை சேர்ந்த அழகுராஜா(24), மேல அனுப்பானடியை சேர்ந்த காளஸ்வரன்(30) ஆகிய 3 பேரும் உசிலம்பட்டி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விவேகானந்தன், சரண் அடைந்த 3 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைதொடர்ந்து அவர்கள் 3 பேரையும் மதுரை மத்திய சிறைக்கு போலீசார் கொண்டு சென்றனர்.

Next Story