செல்போனுக்கு அடிக்கடி "மிஸ்டுகால்" வந்ததால் நடத்தையில் சந்தேகம்: மனைவி கழுத்து அறுத்து கொலை விவசாயி கைது


செல்போனுக்கு அடிக்கடி மிஸ்டுகால் வந்ததால் நடத்தையில் சந்தேகம்: மனைவி கழுத்து அறுத்து கொலை விவசாயி கைது
x
தினத்தந்தி 21 Jun 2017 7:55 PM GMT (Updated: 2017-06-22T01:25:48+05:30)

செல்போனுக்கு அடிக்கடி “மிஸ்டுகால்“ வந்ததால் நடத்தையில் சந்தேகம் அடைந்து மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொன்ற விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

மைசூரு,

உன்சூர் அருகே, செல்போனுக்கு அடிக்கடி “மிஸ்டுகால்“ வந்ததால் நடத்தையில் சந்தேகம் அடைந்து மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொன்ற விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

“மிஸ்டுகால்“

மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா கொப்பலு கிராமத்தை சேர்ந்தவர் தர்மா(வயது 45). விவசாயி. இவரது மனைவி லட்சுமி (35). இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு லட்சுமியின் செல்போன் பழுதானது. இதனால் லட்சுமி அதேப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் தனது செல்போனில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய கொடுத்ததாக தெரிகிறது.

இதையடுத்து செல்போனை பழுதுநீக்கி கொடுத்த அந்த வாலிபர், லட்சுமியின் செல்போன் எண்ணை குறித்து வைத்து கொண்டதாக தெரிகிறது. மேலும் அந்த வாலிபர் அடிக்கடி லட்சுமியின் செல்போன் எண்ணுக்கு “மிஸ்டுகால்“ கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. லட்சுமியின் செல்போனுக்கு அடிக்கடி “மிஸ்டுகால்“ வந்ததால் இதுகுறித்து லட்சுமியிடம், தர்மா கேட்டு உள்ளார்.

கழுத்து அறுத்து கொலை

அப்போது லட்சுமி, தனக்கு செல்போனை பழுது நீக்கி கொடுத்த அந்த வாலிபர் அடிக்கடி தனக்கு “மிஸ்டுகால்“ கொடுத்து வருவதாக தர்மாவிடம் கூறினார். இதனையடுத்து அந்த வாலிபரிடம் சென்று எனது மனைவியின் செல்போனுக்கு “நீ எப்படி மிஸ்டுகால் கொடுப்பாய்“ என்று கேட்டு தர்மா தகராறு செய்து உள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் லட்சுமியும், தர்மாவும் வீட்டில் இருந்தனர். அப்போது லட்சுமியின் செல்போனுக்கு அந்த வாலிபர் “மிஸ்டுகால்“ கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து லட்சுமியிடம், தர்மா நான் அந்த வாலிபரிடம் தகராறு செய்தும், அவர் மறுபடியும் உனக்கு “மிஸ்டுகால்“ கொடுத்து வருகிறார். இதனால் உனக்கும், அந்த வாலிபருக்கும் ஏதோ தொடர்பு உள்ளது என்று கூறி லட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை தர்மா அடித்ததாக தெரிகிறது. அப்போது ஆத்திரம் அடைந்த தர்மா, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து லட்சுமியின் கழுத்தை அறுத்து உள்ளார். இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

கைது

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த தர்மா அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து அறிந்த அப்பகுதி மக்கள் உன்சூர் புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் லட்சுமியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது அடிக்கடி “மிஸ்டுகால்“ வந்ததால் நடத்தையில் சந்தேகப்பட்டு லட்சுமியை, தர்மா கழுத்தை அறுத்து கொன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து உன்சூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய தர்மாவை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

சோகம்

செல்போனுக்கு அடிக்கடி “மிஸ்டுகால்“ வந்ததால் நடத்தையில் சந்தேகம் கொண்டு மனைவியை, கணவனே கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Next Story