நுங்கம்பாக்கம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் போலீஸ் கமிஷனர் நேரடியாக சென்று ஆய்வு


நுங்கம்பாக்கம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் போலீஸ் கமிஷனர் நேரடியாக சென்று ஆய்வு
x
தினத்தந்தி 22 Jun 2017 1:00 AM GMT (Updated: 21 Jun 2017 7:59 PM GMT)

நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம், சூளைமேடு பகுதியில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல். போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை, 

லயோலா கல்லூரி அருகே உள்ள சுரங்க பாதையை சீரமைக்கும் பணி நடப்பதால், நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம், சூளைமேடு பகுதியில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த பகுதிக்கு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.

சுரங்க பாதை சீரமைப்பு

சென்னையில் போக்குவரத்து நெரிசலின்றி வாகனங்கள் சீராக செல்லவும், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் காலதாமதமின்றி செல்லவும், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில், பல புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

லயோலா கல்லூரி அருகே உள்ள சுரங்க பாதையை சீரமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இதனால், ஒருவழி போக்குவரத்து கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் காரணமாக நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, சூளைமேடு ஆகிய பகுதிகளில் நேற்று காலை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஈ.வே.ரா. பெரியார் சாலை, ஹாரிங்டன் சாலை, சேத்துப்பட்டு சந்திப்பு மற்றும் ஈகா சந்திப்பு வழியாக வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.

கமிஷனர் நேரடி ஆய்வு

நெரிசல் ஏற்பட்ட பகுதிக்கு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று காலை சென்று நேரடியாக ஆய்வு செய்தார். போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் சீராக செல்வதற்கு அவர் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

மேற்கண்ட தகவல் போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story