மினியேச்சர் மனிதர்கள்..!


மினியேச்சர் மனிதர்கள்..!
x
தினத்தந்தி 22 July 2017 11:30 AM GMT (Updated: 22 July 2017 9:51 AM GMT)

பிரமாண்ட விஷயங்களைப் போலவே மினியேச்சர் பொம்மைகளும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துபவை. அப்படிப்பட்ட மினியேச்சர் பொம்மைகளை தத்ரூபமாக செய்து அசத்துகிறார், ஸ்ரீஹரி சரண்.

பிரமாண்ட விஷயங்களைப் போலவே மினியேச்சர் பொம்மைகளும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துபவை. அப்படிப்பட்ட மினியேச்சர் பொம்மைகளை தத்ரூபமாக செய்து அசத்துகிறார், ஸ்ரீஹரி சரண்.

சென்னை போரூரை சேர்ந்த ஹரி... புதுமண தம்பதிகள், அழகான குழந்தைகள், அரசியல் பிரபலங்கள்... என அனைவரையும் இரண்டரை அடி மினியேச்சர் சிலைகளாக வடிவமைத்துவிடுகிறார். கம்ப்யூட்டர் என்ஜினீயர் படித்துவிட்டு கணினி நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் பணியாற்றியவர்... திடீரென மினியேச்சர் உலகத்திற்குள் நுழைந்திருக்கிறார். அந்த சுவையான அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்...

“பொழுதுபோக்காக ஆரம்பித்தது இன்று என்னுடைய உலகமாக மாறிவிட்டது. சிறுவயதில் துளிர்விட்ட ஓவிய ஆசை, கல்லூரி படிப்பு வரை தொடர்ந்தது. அந்த சமயத்தில் என்னுடைய நண்பர்கள் கலை படிப்பை தேர்ந்தெடுத்து படிக்க, அவர்களுடன் சேர்ந்து சிலை வடிவமைப்பு, சிலை செதுக்கும் விதம்... போன்ற கலைநுட்பங்களை கற்றுக்கொண்டேன். ஓவியக் கலை, சிற்ப கலையாக உருமாறிய தருணம் அது” என்று பேசும் ஹரி, மினியேச்சர் சிலைகளுக்காக பன்னாட்டு நிறுவனத்தின் வேலையையும் விட்டுக் கொடுத்திருக்கிறார்.

“ரப்பர், மரக்கட்டை, பென்சில்... என கையில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும், குட்டி சிலை களாக மாற ஆரம்பித்தன. என்னுடைய வேலைப்பாடுகளையும், கலை நுணுக்கத்தையும் பார்த்தவர்கள் மினியேச்சர் சிலைகளை உருவாக்க ஊக்கப்படுத்தினர். அதன் வெளிப்பாடாக விதவிதமான சிலைகளை உருவாக்க ஆரம்பித்தேன். பொழுதுபோக்காக ஆரம்பித்த ஆசை திடீரென முழுநேர பணியாக மாறியது. என்னுடைய சிலைகளை சமூக வலைத்தளங்களில் காட்சிப்படுத்த, நல்ல வரவேற்பு கிடைத்தது. சிலைகளை வாங்க பலரும் ஆர்வம் காட்டினர். அதனால் மினியேச்சர் சிலைகளை நம்பி கை நிறைய சம்பாதிக்கும் வேலையை விட்டுவிட்டேன். என்னுடைய நம்பிக்கை வீண்போகவில்லை” என்று கூறுபவர் மற்றொரு சுவாரசிய கதையையும் கூறினார்.

“கை நிறைய சம்பளம். ஐ.டி. வேலை. வெகு சில மாதங்களில் அமெரிக்க பயணம்... என்று என்னுடைய எதிர்காலத்தை நினைத்து பெற்றோர் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் தான் மினி யேச்சர் சிலைகளுக்காக பணியை ராஜினாமா செய்திருந்தேன். அதை நான் ஏற்றுக்கொள்ளலாம். நிச்சயமாக என்னுடைய பெற்றோர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால் பணி விலகலை அவர்களிடம் மறைத்துவிட்டேன். அந்த சமயம் மினியேச்சர் சிலைகளுக்காக போரூரில் தனி அலுவலகம் எடுத்திருந்ததால்... அங்கு சென்று பணியாற்றிவிட்டு வீட்டிற்கு திரும்பி விடுவேன். இப்படியே ஒன்றரை வருடங்கள் கழிந்தன. அதற்கு பிறகுதான் பெற்றோருக்கு தெரியவந்தது” என்பவர்... ஐ.டி.பணியில் கிடைத்த சம்பளத்தை விட, சிலை தயாரிப்பில் அதிக வருமானம் கிடைப்பதாக பகிர்ந்து கொண்டார். அவரிடம் மினியேச்சர் சிலைகளின் சிறப்பை பற்றி கேட்டோம். அதற்கு தன் ஆராய்ச்சிகளை பதிலாக் கினார்.

“கல், மரம், மெழுகு, ரப்பர் பொருட்கள், காகிதங்கள், பிளாஸ்டிக்... என பல பொருட்களை கொண்டு மினியேச்சர் சிற்பங்களை வடிவமைக்கிறார்கள். ஆனால் சின்தடிக் களிமண்ணை கொண்டு வடிவமைப்பது கொஞ்சம் கடினமான காரியம். இதனை எளிதாக தயாரித்துவிட முடியாது. ஏனெனில் ஒருசில நாட்களிலேயே சுடப்பட்ட களிமண் சிலைகளில் விரிசல் விழுந்துவிடும். இதனால் சிலைகளை வடிவமைப்பவர்களுக்கும், வாங்கி செல்பவர் களுக்கும் நஷ்டமாக அமைந்துவிடும். இத்தகைய குறைபாட்டை நீக்க பல வழிகளிலும் ஆராய்ச்சி மேற்கொண்டோம்.

யூ-டியூப் வீடியோக்கள், வெளிநாட்டு பல்கலைக் கழக ஆராய்ச்சி முடிவுகள் போன்றவற்றை அலசி ஆராய்ந்து இறுதியில் அதற்கான தீர்வை கண்டுபிடித்தோம். சின்தடிக் களிமண் பொம்மைகளை ஒரேசமயத்தில் சூடுபடுத்தாமல்... அதை குளிரவைத்து சூடுபடுத்த வேண்டும். அப்போதுதான் விரிசல் ஏற்படாமல், உறுதி தன்மையோடு இருக்கும். இதை புரிந்து கொண்டதும், சின்தடிக் களிமண்ணால் உருவாக்கப்பட்ட மினியேச்சர் பொம்மைகளை 4-5 நாட்கள் இடைவெளியில் மீண்டும் சூடுபடுத்தி சோதித்தோம். சிலைகள் உறுதியோடு இருக்கின்றன” என்று உற்சாகமாக பேசும் ஹரி, இணையதளம் மூலமாக மினியேச்சர் சிலைகளை விற்கிறார். இவரது கைவண்ணத்தில் உருவாகும் மினியேச்சர் பொம்மைகளில் விரிசல் விழுவதில்லை. திருமண நாட்கள், பிறந்த நாட்கள், காதலர் தின கொண்டாட்டம் என்றால் ஹரியின் வேலைப்பளு கூடிவிடு கிறது.“இயல்பாக, ஒரு மாதத்திற்கு 200-க்கும் மேற்பட்ட சிலைகளை வடிவமைக்கிறோம். பண்டிகை காலங்களில் சிலைகளின் எண்ணிக்கை, நிச்சயம் 300-ஐ தாண்டிவிடும். தெளிவான போட்டோ ஒன்றை கொடுத்தால் போதும், அந்த போட்டோவில் இருப்பவரை அப்படியே மினியேச்சர் சிலையாக மாற்றிவிடுவோம். இயந்திரங்கள் எதுவும் இன்றி கைகளினால் உருவாக்குவதால், ஒரு சிலை வடிவமைக்க 10 முதல் 20 நாட்களாகும்.

முதலில் முடி இல்லாத முகத்தை வடிவமைத்து வாடிக்கையாளர்களின் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்போம். அதற்கு அவர்கள் ‘ஓகே’ சொல்லிவிட்டால் அடுத்தடுத்த பணிகளை ஆரம்பித்துவிடுவோம். முகம், உடம்பு, உடை என பலதரப்பட்ட பணிகளுக்கு பிறகு மினியேச்சர் மனிதர்கள் உயிர்பெறுவார்கள்” என்பவரிடம் சிலைகளுக்கு வண்ணம் தீட்டும் முறை பற்றி கேட்டோம். அதற்கு அவர்...

“சிலைகளை உருவாக்கி அதற்கு வண்ணம் பூசுவதைவிட, சிலைகளுக்கு தேவையான வண்ணங்களை களிமண்ணில் கலந்து தயாரிப்பதே சிறந்தது. அத்தகைய சிலைகளில் தான் உயிரோட்டம் தவழ்ந்தோடும். வண்ணமயமான உடைகள், காலணிகள், தோல் நிறம்... என சிலை யின் எல்லா நிறங் களையும் களிமண்ணிலேயே கலந்துவிடுகிறோம். அதனால் வண்ணம் பூசும் வேலை சுலபமாகினாலும், உடை வடிவமைப்பு கடினமாகிவிடுகிறது. அதிலும் அதிக டிசைன்களுடைய உடைகள் என்றால் அத்தகைய சிலைகளை உருவாக்க அதிகமாக மெனக்கெடவேண்டும்.

சிலை வடிவமைப்பிற்கான பணிகளை சதீஷ்குமார், பிரபாகரன், லலிதா ஆகியோருடன் பகிர்ந்துகொள்வதால் வேலை சுலபமாக முடிகிறது. ஐ.டி.யில் ஒருவிதமான வேலையை பார்த்து சலித்து போயிருந்த வாழ்க்கை சிலை வடிவமைப்பினால் மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கிறது. போட்டோவில் இருப்பவரை தத்ரூப சிலையாக உருவாக்கி அழகு பார்க்கும் திருப்தி, ஐ.டி.வேலையில் கிடைக்காது. மனநிறைவான வேலை இது” என்பவர், இணையதள வடிவமைப்பிலும் ஆர்வம் காட்டுகிறார்.

சிலை வடிவமைப்பு, இணையதள வடிவமைப்பு ஆகிய பணிகளுக்கு மத்தியில் நண்பர்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில், அவர்களது மினியேச்சர் சிலைகளை சிறப்பு பரிசாகவும் வழங்கி வருகிறார்.

Next Story