போலீஸ் நிலையத்தில் இருந்து வாலிபர் தப்பி ஓட்டம்


போலீஸ் நிலையத்தில் இருந்து வாலிபர் தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 9 Aug 2017 3:45 AM IST (Updated: 9 Aug 2017 1:25 AM IST)
t-max-icont-min-icon

விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர் போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடினார்.

பூந்தமல்லி,

தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் போலீசார் நேற்று முன்தினம் இரவு மணிமங்கலம் பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த நபரை மடக்கி விசாரணை மேற்கொண்டனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.

தொடர்ந்து விசாரணையில் அவர் படப்பையை அடுத்த சிறுமாத்தூர் பகுதியை சேர்ந்த பூபாலன் (வயது 35) என்பதும் இவர் மீது ஓட்டேரி, மணிமங்கலம், சோமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் திருட்டு, நகை பறிப்பு போன்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

இதனால் உஷாரான போலீசார் பூபாலனை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவரது கால் மற்றும் உடலில் காயங்கள் இருந்ததால் பின்னர் விசாரித்து கொள்ளலாம் என்று போலீஸ் நிலையத்திற்குள்ளேயே அமர வைத்தனர்.

நேற்று காலை கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று பூபாலன் கூறியதையடுத்து போலீசார் அனுப்பி வைத்தனர். வெளியே சென்ற பூபாலன் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்து சென்று பார்த்தபோது அவரை காணவில்லை.

இதையடுத்து அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டு போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடியவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story