3 வீடுகளில் 42½ பவுன் நகை– ரூ.3¾ லட்சம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


3 வீடுகளில் 42½ பவுன் நகை– ரூ.3¾ லட்சம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 8 Aug 2017 10:15 PM GMT (Updated: 2017-08-09T02:53:07+05:30)

திருவோணம் அருகே 3 வீடுகளில் 42½ பவுன் நகை, ரூ.3¾ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருவோணம்,

தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள சென்னியவிடுதி மேற்கு கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது55). விவசாயி. சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு தனது தோட்டத்துக்கு சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது பூஜை அறையில் இருந்த 13 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் ஆகியவற்றை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதேபோல் செல்வத்தின் பக்கத்து வீட்டை சேர்ந்த மதியழகனின் வீட்டிலும் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. குடும்பத்தினருடன் மதியழகன் வெளியூரில் வசித்து வருகிறார். இதனால் அந்த வீட்டில் அவருடைய தம்பி அறிவழகன் (31) வசித்து வருகிறார். இந்த நிலையில் அறிவழகன், வேலைக்காக வெளியூருக்கு சென்றிருந்தபோது மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து 4½ பவுன் நகை, ரூ. 7 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.

சென்னியவிடுதிக்கு அருகே உள்ள வெங்கரை கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி (36). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுவிட்டார். நேற்றுமுன்தினம் மாலை திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டுக்குள் பீரோவில் இருந்த 25 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை காணவில்லை. மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

3 வீடுகளில் 42½ பவுன் நகை, ரூ.3¾ லட்சம் கொள்ளை போனது தொடர்பாக தகவல் அறிந்த வாட்டாத்திக்கோட்டை போலீசார் சம்பவம் நடந்த வீடுகளுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த சம்பவங்களில் தொடர்புடைய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story