தலையில் கல்லால் தாக்கி ஆட்டோ டிரைவர் கொலை மற்றொரு ஆட்டோ டிரைவர் கைது


தலையில் கல்லால் தாக்கி ஆட்டோ டிரைவர் கொலை மற்றொரு ஆட்டோ டிரைவர் கைது
x
தினத்தந்தி 16 Aug 2017 9:30 PM GMT (Updated: 16 Aug 2017 9:15 PM GMT)

சவ ஊர்வலத்தில் ‘கானா’ பாட்டு பாடியபோது ஏற்பட்ட மோதலில், தலையில் கல்லால் தாக்கி ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை சைதாப்பேட்டை ஜோதியம்மாள் நகரை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 40). ஆட்டோ டிரைவர். அதே பகுதியில், குப்பன் (38), ஆறுமுகம் (30), பாலாஜி (29) ஆகியோரும் வசித்து வருகின்றனர். இதில், கூலித் தொழிலாளியான குப்பன், முனியாண்டியின் நண்பர் ஆவார். மற்றொரு கூலித் தொழிலாளியான ஆறுமுகமும், ஆட்டோ டிரைவர் பாலாஜியும் நண்பர்கள்.

கடந்த 14-ந் தேதி இரவு இவர்கள் 4 பேரும், அப்பகுதியில் இறந்து போன ஒருவரின் சவ ஊர்வலத்தில் பங்கேற்றனர். அப்போது, ஆட்டம் பாட்டத்துடன் ‘கானா’ பாட்டு பாடியபடி சென்றனர். அந்த நேரத்தில், 4 பேருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதை அருகில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்து வைத்தனர்.

மண்டை உடைந்தது

இருந்தாலும், கோபம் தணியாமல் இருந்த 4 பேரும் 2 அணியாக நந்தனம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்திவிட்டு, அங்குள்ள மைதானத்தில் அமர்ந்து காரசாரமாக பேசிக் கொண்டிருந்தனர். இதனால், மீண்டும் 4 பேருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

குடிபோதையில் 2 அணியினரும் மோதிக் கொண்டனர். கையில் கிடைத்ததைக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது, முனியாண்டியை பாலாஜி கல்லால் தாக்கினார். இதில், முனியாண்டியின் மண்டை உடைந்தது. இதனால், ஆத்திரம் அடைந்த முனியாண்டியின் நண்பர் குப்பன், பாலாஜியை கத்தியால் வெட்டினார்.

பரிதாப சாவு

இப்படி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் 4 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் 4 பேரும் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், முனியாண்டி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேரும் அங்கேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து, விசாரணை மேற்கொண்ட சைதாப்பேட்டை போலீசார் முதலில் இந்த சம்பவத்தை அடிதடி வழக்காக பதிவு செய்திருந்தனர். முனியாண்டி இறந்துபோன நிலையில், கொலை வழக்காக மாற்றியுள்ளனர். அதற்கு காரணமாக பாலாஜியையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவரும் கத்திகுத்து காயத்துடன் சிகிச்சை பெறுவதால், சிகிச்சை முடியும் வரை போலீசார் அவரை கண்காணிப்பில் வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர். பாலாஜியின் நண்பரான ஆறுமுகத்தையும் போலீசார் கைது செய்தனர். 

Next Story