தூர்வாரப்பட்ட பளிங்காநத்தம் மானோடை ஏரியில் தண்ணீர் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி


தூர்வாரப்பட்ட பளிங்காநத்தம் மானோடை ஏரியில் தண்ணீர் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 21 Aug 2017 11:00 PM GMT (Updated: 21 Aug 2017 9:40 PM GMT)

தூர்வாரப்பட்ட பளிங்காநத்தம் மானோடை ஏரியில் தண்ணீர் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கல்லக்குடி,

கல்லக்குடி அருகே பளிங்காநத்தம் மற்றும் புதூர்பாளையம் பஞ்சாயத்தில் சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் மானோடை ஏரி உள்ளது. தாப்பாய், அழுந்தலைப்பூர், கருடமங்கலம், வரகுப்பை, மேலரசூர், கல்லக்குடி பகுதிகளில் பெய்யும் மழைநீர் தட்டான் ஓடை வழியாக பளிங்காநத்தத்தில் உள்ள மானோடை ஏரிக்கு வந்து சேருகிறது. மேலும் வடுகர்பேட்டை, காமராஜபுரம், ஆரோக்கியபுரம், மாதாபுரம், கோவண்டாகுறிச்சி, வானத்திரையான்பாளையம் ஆகிய பகுதிகளில் பெய்யும் மழை நீரும், இந்த மானோடை ஏரிக்குத்தான் வந்து சேருகிறது.

மேலும் கொள்ளிடம் வாத்தலையில் இருந்து புள்ளம்பாடி வாய்க்கால் பாசனநீர் இந்த ஏரிக்கு வருகிறது. பளிங்காநத்தம், செம்பியக்குடி, கீழகவட்டாங்குறிச்சி, விளாகம், வெங்கனூர், விரகாலூர், கோவண்டக்குறிச்சி, ஆலம்பாக்கம், கரைவெட்டி, ஆலம்பாடி மேட்டூர் முதல் திண்ணக்குளம் வரை சுமார் 18 கிராமங்களில் உள்ள சுமார் 2,700 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு இந்த ஏரியின் தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக ஏரி தூர்வாரப்படாததால் ஏரி முழுவதும் வண்டல் மண் நிரம்பி தூர்ந்து விட்டது. மேலும் கருவேலமரங்கள் முளைத்து ஏரியின் அகலப்பரப்பும் குறைந்து கரைகள் சேதமடைந்தன. இந்த ஏரியை தூர்வாரி, கரைகளை பலப்படுத்த திருச்சி மாவட்ட கலெக்டரிடம், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அவருடைய உத்தரவின்படி வேளாண்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் ஏரியில் வண்டல் மண் அகற்றப்பட்டு, தூர்வாரப்பட்டு, கரை பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக தற்போது ஏரியில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்த தண்ணீர் மூலம் ஒருபோகம் சாகுபடி செய்ய வாய்ப்புள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் ஏரியின் நீர் கால்நடைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Related Tags :
Next Story