அரியூர் அருகே மரத்தில் கார் மோதி விபத்து; பெண் சாவு மேலும் 3 பேர் படுகாயம்


அரியூர் அருகே மரத்தில் கார் மோதி விபத்து; பெண் சாவு மேலும் 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 21 Aug 2017 11:00 PM GMT (Updated: 21 Aug 2017 10:40 PM GMT)

புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் என்ற பிரகதீஸ்வரன் (வயது 44). இவர் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார்.

புதுச்சேரி,

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரகதீஸ்வரன், அவருடைய மனைவி சீத்தாலட்சுமி, மகள் கிருத்திகா உறவினர் உமா மற்றும் உறவினர்கள் சிலருடன் அவருடைய காரில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றார்.

சுற்றுலாவை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் இரவு பிரகதீஸ்வரனும், அவருடைய குடும்பத்தினரும் புதுச்சேரிக்கு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை பிரகதீஸ்வரன் ஓட்டினார். நள்ளிரவு 12.30 மணியளவில் அரியூர் அருகே பள்ளித்தென்னல் கிராமத்தில் வந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள ஒரு மரத்தில் மோதி, நடுரோட்டில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பிரகதீஸ்வரன் மற்றும் காரில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு அரியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது சீத்தாலட்சுமி (40) வரும் வழியிலேயே இறந்தது தெரியவந்தது. பிரகதீஸ்வரன், மகள் கிருத்திகா, உறவினர் உமா ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story