திருநள்ளாறு அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்; தலைமை ஆசிரியர் கைது


திருநள்ளாறு அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்; தலைமை ஆசிரியர் கைது
x
தினத்தந்தி 21 Aug 2017 11:45 PM GMT (Updated: 21 Aug 2017 10:44 PM GMT)

திருநள்ளாறு அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஊர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால்,

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறை அடுத்துள்ள சேத்தூரில் தனியார் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு எல்.கே.ஜி. முதல் 10-ம் வகுப்பு வரை பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகிறது. இப்பள்ளியில் சேத்தூர், செல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்தநிலையில் அந்த பள்ளியின் எல்.கே.ஜி. மாணவியான 4½ வயது சிறுமி கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலை வழக்கம் போல் பள்ளியிலிருந்து வீடு திரும்பினார். ஆனால் மிகவும் சோர்வாக காணப்பட்டார். அதனால் சிறுமியை காரைக்காலில் உள்ள பெண் டாக்டர் ஒருவரிடம் பெற்றோர் அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அது குறித்து சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்தார்
அதை தொடர்ந்து சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தபோது பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் திருநள்ளாறு போலீசில் இதுகுறித்து புகார் அளித்தனர்.

முற்றுகை-சாலை மறியல்

இந்நிலையில் நேற்று காலை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியரையும், பள்ளியின் தாளாளரையும் கைது செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பெற்றோர், உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து மெயின்ரோட்டிற்கு திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் பாலியல் பலாத்கார புகார் கூறப்பட்ட தலைமை ஆசிரியரான காரைக்கால் வரிச்சிக்குடி மெயின்ரோட்டை சேர்ந்த பக்கிரிசாமி என்கிற ரவியை (வயது 48) திருநள்ளாறு போலீசார் கைது செய்து திருநள்ளாறு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

அதிகாரிகள் சமரசம்

சாலைமறியல் போராட்டம் குறித்து தகவலறிந்த துணை கலெக்டர் எஸ்.கே.பன்னீர்செல்வம், காரைக்கால் வடக்கு மண்டல போலீஸ் சூப்பிரண்டு மாரிமுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, குற்றஞ்சாட்டப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரை கைது செய்து விட்டதாகவும், அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

ஆனால் தலைமை ஆசிரியரை மட்டும் கைது செய்தால் போதாது, பள்ளியின் தாளாளரையும் கைது செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரை பணிநீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மறியலில் ஈடுபட்டோர் வலியுறுத்தினார்கள். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சாலைமறியல் காரணமாக காரைக்கால்-திருநள்ளாறு-பேரளம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட தலைமை ஆசிரியர் பக்கிரிசாமி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் சார்பில் அங்குள்ள அறிவிப்பு பலகையில் எழுதி பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் பக்கிரிசாமியிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரை குழந்தைகள் பாலியல் தாக்குதல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் காரைக்காலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story