எம்.ஆர்.சத்திரம் கடற்கரை நினைவு தூணை சீரமைக்க வலியுறுத்தல்


எம்.ஆர்.சத்திரம் கடற்கரை நினைவு தூணை சீரமைக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 22 Aug 2017 10:00 PM GMT (Updated: 22 Aug 2017 6:28 PM GMT)

எம்.ஆர்.சத்திரம் கடற் கரையில் அமைக்கப்பட்ட நினைவு தூணை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி பகுதியில் கடந்த 1964- ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி இரவில் ஏற்பட்ட கடுமையான புயல் மற்றும் கடல் கொந்தளிப்பால் தனுஷ்கோடி நகரமே முற்றிலும் அழிந்து போனதுடன் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்து போனார்கள். புயலில் உயிரிழந்தவர்களின் நினைவாக தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் கல்வெட்டுடன் கூடிய நினைவு தூண் வைக்கப் பட்டது. அந்த நினைவு தூணில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய 3 மொழிகளால் எழுதப்பட்ட கல்வெட்டும் நினைவு தூணை சுற்றி பதிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடற்கரையில் வைக்கப்பட்ட நினைவு தூண் மற்றும் அதில் பதிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் முழுமையாக உடைந்தும் எந்த வித பராமரிப்பில்லாமலும் பல வருடங்களாக அலங்கோலமாக காட்சியளித்து வருகின்றது.

இது பற்றி சுற்றுலா ஆர்வலர் ஜெயகாந்தன் கூறியதாவது:-

நினைவு தூண் அமைக்கப்பட்ட பிறகு ஒரு ஆண்டு கூட தனுஷ்கோடி அழிவு தினத்தன்று அரசு சார்பிலோ பொது மக்களோ, சுற்றுலா பயணிகளோ அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடு செய்தது கிடையாது.

53 ஆண்டுகளுக்கு பிறகு புதிதாக அமைக்கப்பட்டுள்ள தனுஷ்கோடி வரையிலான சாலை கடந்த மாதம் 27-ந் தேதி திறக்கப்பட்டு பயன் பாட்டுக்கு வந்ததில் இருந்து சுற்றுலா வாகனங்கள் அனைத்துமே தனுஷ்கோடி அரிச்சல் முனை மற்றும் கம்பிப்பாடு கடற்கரைக்கு தான் சென்று வருகின்றன. இதனால் கடந்த 3 வாரத்திற்கு மேலாகவே எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டு வருகின்றது. இந்த கடற்கரையில் இது போன்று ஒரு நினைவு தூண் உள்ளதே பலருக்கு தெரியாத நிலைமை இருந்து வருகின்றது.

ஆகவே சேதமான நினைவு தூணை சீரமைத்து புயலால் அழிந்து போன கட்டிடங்கள் உள்ள கம்பிப்பாடு பகுதியில் இடம் மாற்றுவதற்கோ அல்லது தனுஷ்கோடி பகுதியில் சுற்றுலா பயணிகள் அனைவரும் பார்த்து அஞ்சலி செலுத்தும் வகையில் புதிதாக நினைவு தூண் அமைக்கவோ தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story