அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் வங்கி பணியாளர்களும் போராட்டம்


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் வங்கி பணியாளர்களும் போராட்டம்
x
தினத்தந்தி 22 Aug 2017 11:00 PM GMT (Updated: 22 Aug 2017 6:37 PM GMT)

மாவட்டத்தில் 4,328 அரசு ஊழியர்களும், 5,428 ஆசிரியர்களும் நேற்று ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்,

கடந்த 2013-ம் ஆண்டு முதல் பழையஓய்வூதியதிட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய பங்களிப்பு ஓய்வூதியதிட்டம் அமலுக்கு வந்தது. இந்ததிட்டத்தில் 5 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். மாதந்தோறும் இதற்காக சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொருவரும் செலுத்திய தொகை எவ்வளவு என்று அறிய முடியாத நிலையில் புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி பணி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைக்கவில்லை.

இதை கண்டித்து கடந்த ஜூலை மாதம் 18-ந்தேதி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியதிட்டத்தினை தொடர வலியுறுத்தியும் மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல் படுத்தக் கோரியும் அனைத்து ஊழியர்களுக்கும் கால முறை ஊதியம் வழங்க வலியுறுத்தியும் நேற்று ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அறிவித்து இருந்தனர்.

அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 16,595 அரசு ஊழியர்களில் 4,328 பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் 747 பேரும், வருவாய்த்துறை ஊழியர்கள் 489 பேரும், வணிகவரித்துறை ஊழியர்கள் 89 பேரும், சத்துணவு ஊழியர்கள் 2,203 பேரும், அங்கன்வாடி ஊழியர்கள் 305 பேரும், இதர ஊழியர்கள் 495 பேரும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். இந்த வேலைநிறுத்தத்தால் அரசு அலுவலகங்களில் ஓரளவு பணி பாதிப்பு ஏற்பட்டது.

மாவட்டத்தில் உள்ள 11,752 ஆசிரியர்களில் 5,428 பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிஆசிரியர்கள் பெரும் அளவில் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால் பல அரசு பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. வெம்பக்கோட்டை பகுதியில் கோமாளிப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் நேற்று விடுமுறை என முன்தினமேஅறிவிக்கப்பட்டதாக அந்த கிராம மக்கள் புகார் கூறினர்.

இது பற்றிமாவட்ட முதன்மை கல்விஅதிகாரி மனோகரனிடம் கேட்ட போது, பள்ளிகளை மூடியஆசிரியர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மனோகரன் உள்பட 26 பேர் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டை வெம்பக்கோட்டை தாலுகா வருவாய் துறை ஊழியர் சங்க தலைவர் ஜெயபாண்டி, செயலாளர் சிவசுப்பிரமணியன், பொருளாளர் விக்னேஷ் ஆகியோர் செய்து இருந்தனர். தாலுகா அலுவலகம் வெறிச்சோடி கிடந்தது.

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் நேற்று ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி மாவட்டத்தில் உள்ள 179 வங்கி கிளைகளில் 140 கிளைகள் மூடப்பட்டு இருந்தன. சிலதனியார் வங்கி கிளைகள் செயல்பட்டன.

மொத்தம் 483 வங்கிஅதிகாரிகளில் 423 பேரும், 824 வங்கி அலுவலர்களில் 746 பேரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பணப்பரிவர்த்தனையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. வணிக நகரான விருதுநகரில் வங்கிகள் சார்ந்த ஆன்-லைன் வணிகமும் பாதிப்பு அடைந்தது. 

Next Story