பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின்கீழ் அக்டோபர் 1–ந் தேதி முதல் நிதி வினியோகிக்கப்படும்


பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின்கீழ் அக்டோபர் 1–ந் தேதி முதல் நிதி வினியோகிக்கப்படும்
x
தினத்தந்தி 22 Aug 2017 9:45 PM GMT (Updated: 22 Aug 2017 9:34 PM GMT)

பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின்கீழ், அக்டோபர் 1–ந் தேதி முதல் விவசாயிகளுக்கு நிதி வினியோகிக்கப்படும் என்று மந்திரி சுபாஷ் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் விவசாயிகளின் காலவரையற்ற போராட்டத்தை தொடர்ந்து, ரூ.34 ஆயிரத்து 22 கோடி பயிர்க்கடனை தள்ளுபடி செய்து முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கடந்த ஜூன் மாதம் அறிவிப்பு வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, பயிர்க்கடன் தள்ளுபடி திட்ட நடைமுறையில் காணப்படும் சிக்கல்களை களைய கேபினட் துணை குழுவை முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நியமித்தார்.

இந்த குழுவின் முதலாவது கூட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது. மந்திரிகள் சுபாஷ் தேஷ்முக், சந்திரகாந்த் பாட்டீல், பாண்டூரங் பூந்த்கர், திவாகர் ராவ்தே மற்றும் நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் டி.கே.ஜெயின் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து, வெளியே வந்த கூட்டுறவுத்துறை மந்திரி சுபாஷ் தேஷ்முக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின்கீழ், விண்ணப்பங்களை வினியோகிப்பதற்காக 26 ஆயிரம் மையங்கள் ஏற்படுத்தினோம். சில மையங்களில் பணம் பெற்றுக் கொண்டு விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுவதாக எங்களுக்கு புகார்கள் வந்தன. இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்தி இருக்கிறோம்.

பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின்கீழ் இதுவரையில் 22 லட்சத்து 40 ஆயிரத்து 943 விவசாயிகள் விண்ணப்பித்து இருக்கின்றனர். செப்டம்பர் 1–ந் தேதி வரையில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும். அக்டோபர் 1–ந் தேதி முதல் விவசாயிகளுக்கு நிதி வினியோகிக்கும் பணி தொடங்கும்.

இவ்வாறு சுபாஷ் தேஷ்முக் தெரிவித்தார்.


Next Story