பெங்களூரு சிறையில் புதிய வீடியோ காட்சிகள் குறித்து சிறை அதிகாரிகள் விளக்கம்


பெங்களூரு சிறையில் புதிய வீடியோ காட்சிகள் குறித்து சிறை அதிகாரிகள் விளக்கம்
x
தினத்தந்தி 22 Aug 2017 11:45 PM GMT (Updated: 22 Aug 2017 10:52 PM GMT)

பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா, இளவரசி இருவரும் வெளியே சென்று வரவில்லை. அவர்கள் வக்கீல்களை சந்திக்க பார்வையாளர் அறைக்கு சென்றபோது கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்தான் அவை என்று புதிய வீடியோ காட்சிகள் குறித்து சிறை அதிகாரிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.

பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். பரப்பனஅக்ரஹாரா சிறையில் முறைகேடுகள் நடப்பதாகவும், சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்காக ரூ.2 கோடியை சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவ் லஞ்சமாக பெற்றுள்ளதாகவும் சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா குற்றம்சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டு சம்பந்தமாக ரூபா, டி.ஜி.பி. சத்திய நாராயணராவ், போலீஸ் டி.ஜி.பி. ஆர்.கே.தத்தா, அரசின் தலைமை செயலாளர் சுபாஷ் சந்திர குந்தியா ஆகியோரிடமும், ஊழல் தடுப்பு படை மற்றும் லோக் அயுக்தாவிலும் அறிக்கை தாக்கல் செய்தார். ரூபாவின் குற்றச்சாட்டை சத்திய நாராயணராவ் முற்றிலுமாக மறுத்தார். ஆனால், ரூபா தனது குற்றச்சாட்டில் உறுதியாக இருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக அவர்களுக்குள் மோதல் உருவானது. இந்த முறைகேடு குறித்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய் குமார் தலைமையில் உயர்மட்ட குழு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு அறைகள் ஒதுக்கப்பட்டதாகவும், அவரும், இளவரசியும் சாதாரண உடையில் சிறையில் நடமாடும் வீடியோ காட்சிகளும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் தனியார் தொலைக்காட்சிகளில் புதிய வீடியோ காட்சி ஒன்று வெளியாகி மீண்டும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

25 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில் ஒரு போலீஸ்காரர் வாசல் கதவை திறக்க சிறை சூப்பிரண்டு அனிதா வாசல் வழியாக வருகிறார். அவரை தொடர்ந்து சுடிதார் அணிந்திருக்கும் சசிகலாவும், புடவை அணிந்திருக்கும் இளவரசியும் தங்களின் கைகளில் பைகள் வைத்துக்கொண்டு வாசல் வழியாக சிறைக்குள் நுழைகிறார்கள். அவர்கள் 2 பேரும் ‘ஷாப்பிங்’ சென்றுவிட்டு சிறைக்குள் வருவதுபோல் அந்த காட்சி இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வீடியோவில் சசிகலா, இளவரசி, சிறை சூப்பிரண்டு தவிர மேலும் 3 போலீஸ்காரர்கள், ஒரு ஆண் கைதி ஆகியோரும் உள்ளனர்.

இதுகுறித்து சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா கூறுகையில், ‘ஊழல் தடுப்பு படையில் நான் விசாரணைக்கு ஆஜரானபோது எனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் வீடியோ ஆதாரங்களை வழங்கினேன். அந்த வீடியோ, தொலைக்காட்சியில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ பற்றி நன்றாக விசாரிக்க வேண்டும். தண்டனை கைதிகள் சிறையில் இருந்து பரோலில் மட்டும் தான் வெளியே செல்ல வேண்டும். தண்டனை கைதியாக சிறையில் உள்ள சசிகலா, இளவரசி ஆகியோர் எப்படி பரோல் இல்லாமல் சிறையில் இருந்து வெளியே சென்றனர்? இதுபற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும்’ என்றார்.

சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி. ரூபாவின் பேட்டி சசிகலா, இளவரசி ஆகியோர் சிறையில் இருந்து வெளியே சென்று வந்ததை உறுதி செய்யும் வகையில் உள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘தற்போது வெளியான வீடியோ காட்சியில் சசிகலா, இளவரசி ஆகியோர் தங்களது சிறை அறையில் இருந்து பார்வையாளர்கள் அறையில் காத்திருந்த அவர்களின் வக்கீல்களை பார்க்க சென்ற காட்சிகள். அவர்கள் பி–வாசல் வழியாக செல்கிறார்கள். இந்த வாசல் வழியாக தான் பெண் கைதிகள் தங்களின் அறைகளில் இருந்து பார்வையாளர் அறைக்கு வந்து செல்வார்கள். சசிகலா அடைக்கப்பட்டுள்ள சிறை அறைக்கும், பார்வையாளர்கள் அறைக்கும் 500 மீட்டர் இடைவெளி உள்ளது. வக்கீல்கள் பார்க்க வந்திருந்ததால் அவர்களை பார்க்க வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களை பைகளில் வைத்து கொண்டு அவர்கள் தங்களின் கைகளில் எடுத்து சென்றனர். மற்றபடி அவர்கள் சிறையில் இருந்து வெளியே செல்லவில்லை’’ என்று மறுத்து உள்ளனர்.


Next Story