மது அருந்தியவரை போலீசார் விரட்டியதால் ரெயிலில் அடிபட்டு தச்சுத்தொழிலாளி பலி


மது அருந்தியவரை போலீசார் விரட்டியதால் ரெயிலில் அடிபட்டு தச்சுத்தொழிலாளி பலி
x
தினத்தந்தி 22 Aug 2017 11:38 PM GMT (Updated: 22 Aug 2017 11:38 PM GMT)

கொருக்குப்பேட்டையில் தண்டவாளம் அருகே மது அருந்தியவரை போலீசார் விரட்டியதால், ரெயிலில் அடிபட்டு தச்சுத்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

ராயபுரம்,

சென்னை, கொருக்குப்பேட்டை, ரங்கநாதபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சேகர், இவரது மகன் ஆனந்தஜோதி (வயது 32). தச்சுத்தொழிலாளி. இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது.

இந்த நிலையில், நேற்று மாலை கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகர் பாலம், ரெயில்வே தண்டவாளத்தின் ஓரத்தில் அமர்ந்து ஆனந்தஜோதி மது அருந்திக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக ஆர்.கே.நகர் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

தண்டவாளத்தின் அருகில் ஆனந்தஜோதி மது அருந்துவதை பார்த்த போலீசார், அவரை விரட்டியதாக தெரிகிறது. அப்போது அவர் தண்டவாளம் நடுவில் ஓடினார். அந்த நேரத்தில், சென்னையில் இருந்து சூளூர்பேட்டை நோக்கி ரெயில் சென்று கொண்டு இருந்தது. இந்த ரெயிலில் அடிபட்டு உடல் 2 துண்டாகி ஆனந்தஜோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* மதுரவாயலில் பணம் வைத்து சூதாடிய பார்த்திபன் (27), விஜயகுமார் (35), பாஸ்கரன் (30), கண்ணன் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

* ஆவடி அருகே அலமாதியில் ஆட்டோவில் புகையிலைப்பொருட்களை கடத்தியதாக முருகன் (44), வரதராஜ் (35) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 5 மூட்டை புகையிலைப்பொருட்களும், ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.

* அம்பத்தூரில் மாநகராட்சி துப்புரவு ஊழியர் பக்தவச்சலம் (23) என்பவர் நேற்று முன்தினம் மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

* ஆதம்பாக்கத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றதாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (28) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 11 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

* பெருங்களத்தூர் ரெயில் நிலையம் அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் யார்? என்று ரெயில்வே போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

* கொடுங்கையூரில் ஆந்திராவில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து விற்பனை செய்ததாக ஏழுமலை (28) கைது செய்யப்பட்டார்.

* தாம்பரம் ரெயில்நிலைய கிழக்கு பகுதியில் 70 வயது மதிக்கத்தக்க நபர் பிணமாக கிடந்தார். அவர் யார்? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


Related Tags :
Next Story