ஊழல் குறித்து பகிரங்க விவாதத்திற்கு நாங்கள் தயார் சித்தராமையா சவால்
ஊழல் குறித்து பகிரங்க விவாதத்திற்கு நாங்கள் தயார் என்று சித்தராமையா கூறினார்.
பெங்களூரு,
பெங்களூருவில் நேற்று புதிய அதிநவீன சொகுசு பஸ்களின் சேவையை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஊழல் குறித்து பகிரங்க விவாதத்திற்கு பா.ஜனதா தயாராக உள்ளது என்று மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் கூறி இருக்கிறார். நாங்களும் இந்த பகிரங்க விவாதத்திற்கு தயாராக உள்ளோம். எங்கள் ஆட்சியில் ஊழல் நடந்துள்ளதாகவும், அது தொடர்பான ஆதாரங்களை வெளியிட உள்ளதாகவும் எடியூரப்பா கூறி இருக்கிறார்.
ஊழல் புகார்களை கூறுகிறார்கள்
எடியூரப்பா மீது ஏராளமான ஊழல் புகார்கள் இருக்கின்றன. கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகின்றன. அந்த புகார்களில் இருந்து அவர் முதலில் வெளியே வரட்டும். அதன் பிறகு எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு குறித்து ஆதாரங்களை வெளியிடட்டும். எங்கள் அரசு மீது தேவை இல்லாமல் பா.ஜனதாவினர் ஊழல் புகார்களை கூறுகிறார்கள். இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பிரதமராக முடியாது என்று எடியூரப்பா சொல்கிறார். எந்த அடிப்படையில் அவர் இவ்வாறு பேசுகிறார் என்று தெரியவில்லை. ராஜீவ்காந்தி சிறு வயதிலேயே பிரதமர் ஆகவில்லையா?. போக்குவரத்து மந்திரியாக இருந்த ராமலிங்கரெட்டி சிறப்பான முறையில் பணியாற்றினார்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Related Tags :
Next Story