அந்தியூரில் அடுத்தடுத்து சம்பவம் 2 கோவில்களில் உண்டியல் திருட்டு மர்ம நபர்கள் கைவரிசை


அந்தியூரில் அடுத்தடுத்து சம்பவம் 2 கோவில்களில் உண்டியல் திருட்டு மர்ம நபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 14 Sep 2017 9:57 PM GMT (Updated: 14 Sep 2017 9:57 PM GMT)

அந்தியூரில் அடுத்தடுத்து 2 கோவில்களில் உண்டியல்களை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் நடந்துள்ளது.

அந்தியூர்,

அந்தியூர் தாலுகா அலுவலகம் பின்புறம் முத்துக்குமாரசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவர் உள்ளார்.

இவர் தினமும் காலை 8 மணிக்கு கோவில் நடையை திறந்து பூஜை செய்து மதியம் 1 மணிக்கு பூட்டுவார். மீண்டும் மாலை 3 மணிக்கு கோவிலை திறந்து இரவு 8.30 மணிக்கு நடையை அடைப்பது வழக்கம். நேற்று முன்தினம் பூஜை முடிந்ததும் இரவு 8.30 மணிக்கு கோவில் நடையை அடைத்து விட்டு சென்றார். பின்னர் நேற்று காலை 8 மணி அளவில் கோவில் நடையை திறக்க வந்து உள்ளார். அப்போது கோவிலில் கிரில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உண்டியல் திருட்டு

உடனே அவர் கோவிலின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது கோவில் தூணில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்த குடத்திலான உண்டியல் திருட்டு போய் இருந்ததை கண்டுபிடித்தார். இரவு நடையை அடைத்து விட்டு சென்ற பிறகு மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்று உண்டியலை திருடி சென்றது தெரியவந்தது.

இதேபோல் மற்றொரு திருட்டும் நடந்து உள்ளது. அந்தியூர் பேட்டை பெருமாள் கோவில் அருகே உள்ள விநாயகர் கோவில் தூணில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்த குடத்திலான உண்டியலையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் போலீசார் திருட்டு சம்பவம் நடந்த 2 கோவில்களுக்கும் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்தியூரில் அடுத்தடுத்து 2 கோவில்களில் உண்டியல்களை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story