அரசு ஆதரவோடு தமிழ் மொழி வளர்ந்து வருகிறது மலேசிய மந்திரி பேச்சு


அரசு ஆதரவோடு தமிழ் மொழி வளர்ந்து வருகிறது மலேசிய மந்திரி பேச்சு
x
தினத்தந்தி 20 Sep 2017 1:30 AM GMT (Updated: 19 Sep 2017 7:50 PM GMT)

அரசு ஆதரவோடு மலேசியாவில் தமிழ் மொழி வளர்ந்து வருகிறது என்று மலேசிய மந்திரி எஸ்.சுப்பிரமணியம் கூறினார்.

சென்னை,

மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மலேசிய நாட்டின் கல்வி அமைச்சகமும், சென்னை பல்கலைக்கழகமும் இணைந்து மலேசியாவில் தமிழ்க்கல்வி- இருநூறாம் ஆண்டு விழா, கருத்தரங்கை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடத்தியது.

மலேசிய சுகாதாரத்துறை மந்திரி டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம், கல்வித்துறை துணை மந்திரி டத்தோ பி.கமலநாதன், மலேசியாவுக்கான இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி, தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயகுமார், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ப.துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் மலேசிய மந்திரி எஸ்.சுப்பிரமணியம் பேசியதாவது:-

தமிழகத்தை தாண்டி ஒரு நாட்டில் தமிழ் வாழ்த்து இருப்பது மலேசியாவில் மட்டும் தான். தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் தரணி எங்கும் தமிழர்கள் புலம் பெயர்ந்து சென்று இருக்கிறார்கள். எங்கு தமிழர்கள் இருக்கிறார்களோ, அங்கு தமிழ்த்தாயும் வாழ்கிறாள்.

தமிழ் மொழியானது நவீனத்தை ஒட்டி வரக்கூடிய மாற்றங்களை ஏற்றுக்கொண்டு வளரக்கூடிய மொழியாக இருக்கிறது. செம்மொழியாகவும், பழமையான மொழியாகவும், வளர்ச்சியை எடுத்துக்கூறும் ஒரு மொழியாகவும், இக்கால சோதனைகளையும், வளர்ச்சிகளையும், வருங்கால வளர்ச்சிக்கும் தன்னை தயாரித்துக்கொண்டு ஏற்பதாக இருக்கக்கூடிய மொழியாகவும் தான் தமிழ் மொழியை பார்க்கிறோம்.

மலேசியாவில் இருக்கக்கூடிய இந்தியர்கள் கலை, கலாசாரம், சமயத்தில் ஈடுபாடு இருந்தாலும் அரசியல் ஈடுபாட்டுடன் இருந்ததால் தான் தமிழ் மொழி வளர்ந்து இருக்கிறது. அரசியலையும், மொழியையும் பிரிக்க முடியாது.

அரசியல் ஆதரவோடும், அரசு ஆதரவோடும் தமிழ் மொழி மலேசியாவில் வளர்ந்து வருகிறது. 530 தமிழ் பள்ளிகள் அங்கு இருக்கின்றன. ஒரு லட்சம் மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

மலேசியாவில் இருக்கும் தமிழர்களுக்கு சமமான அளவில் மியான்மரிலும் தமிழர்கள் உள்ளனர். ஆனால் அங்கு அரசியல் மாற்றத்தினால் நம்முடைய மொழியை மறைத்துவிட்டார்கள். அதை மீண்டும் கொண்டுவர முயற்சிக்கிறார்கள்.

அங்கு உள்ள தமிழ் சமுதாயம் அரசு உதவி இல்லாமல் இதை செய்கிறது. 200 ஆண்டுகளுக்கு முன்பு சென்ற நாங்கள் தற்போது வெற்றியோடு திரும்பி வந்து இருக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக அமைச்சர்கள் ஜெயகுமார், செங்கோட்டையன், அன்பழகன் ஆகியோர் பேசுகையில், ‘மலேசிய நாட்டு தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்றாலும் அவர்களுக்கு உதவ இந்த அரசு எப்போதும் தயாராக இருக்கிறது. மலேசியாவில் தமிழ் குழந்தைகள் எளிதாக தமிழ் கற்பதற்கான வாய்ப்புகளை தந்துள்ள அந்த அரசின் நல் உள்ளத்தை பாராட்டுகிறோம்’ என்றனர்.

முன்னதாக, மலேசியாவில் தமிழ்க்கல்வி 200 ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சியை எடுத்துரைக்கும் கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டது.

Next Story