அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க நினைப்பவர்களின் எண்ணம் பகல் கனவாக முடியும் எடப்பாடி பழனிசாமி பேச்சு


அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க நினைப்பவர்களின் எண்ணம் பகல் கனவாக முடியும் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 20 Sep 2017 11:15 PM GMT (Updated: 20 Sep 2017 7:11 PM GMT)

அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க நினைப்பவர்களின் எண்ணம் பகல் கனவாக முடியும் என்று, நாகையில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

நாகப்பட்டினம்,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நாகை மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நாகை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாலையூரில் நேற்று நடந்தது.

விழாவுக்கு சபாநாயகர் தனபால் தலைமை தாங்கினார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கலந்து கொண்டு பேசினார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார்.

விழாவில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். உருவப்படத்தை திறந்து வைத்தும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கியும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

1991-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, நாகை மாவட்டத்தை உருவாக்கினார். இந்த மாவட்டத்தில் உள்ள பூம்புகார் துறைமுகம் பன்னாட்டு வணிக மையமாக உள்ளது. நாகை மாவட்டம் விவசாயம், மீன்பிடி தொழில் நிறைந்த மாவட்டம்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். பெண்களை மிகவும் போற்றக்கூடியவர். பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்றால் உடனே உதவிக்கரம் நீட்டுவார். ஜெயலலிதா ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்து வெளியேறிய போது அவர் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நடித்துக்கொண்டு இருந்தார். அப்போது அவரைப்பற்றி மு.க.முத்து தவறாக விமர்சனம் செய்தார். இதற்கு பதில் கூறும் வகையில் எம்.ஜி.ஆரின் ரசிகர் ஒருவரும் மு.க.முத்துவை விமர்சனம் செய்தார். இதை அறிந்த எம்.ஜி.ஆர் யாரையும் விமர்சனம் செய்யக்கூடாது என்றார். நாமும் பிறர் குறித்து விமர்சனம் செய்யும் போதும் எச்சரிக்கையுடன் பேச வேண்டும்.

சிலர் மனக்கோட்டை கட்டிக்கொண்டு அதை செய்வேன், இதை செய்வேன், வானத்தை வில்லாக வளைப்பேன் என்று பேசி மக்களை கவரும் வேலையை செய்கிறார்கள். இவர்கள் கட்டுவது மலைக்கோட்டை அல்ல. அது மணல்கோட்டை என்பது மக்களுக்கு தெரியும்.

சிலர் கற்பனை உலகில் இருந்து கொண்டு தானும் கெட்டு, தன்னை நம்பியவர்களையும் கெடுக்கிறார்கள். அவர்கள் தங்கள் கற்பனையை நிறுத்திக்கொண்டு தானும் கெடாமல், தன்னை நம்பியவர்களையும் கெடுக்காமல் இருக்க வேண்டும்.

ஜெயலலிதா ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட எண்ணற்ற திட்டங்களை இங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் 25 அரங்குகளில் தத்ரூபமாக அமைத்துள்ளனர். நாகை மாவட்டத்தோடு சேர்த்து 14 மாவட்டங்களில் இந்த நூற்றாண்டு விழா நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 2½ லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயனடைந்துள்ளனர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா செய்த சாதனைகளை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த நூற்றாண்டு விழா நடத்தப்படுகிறது.

ஆனால் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் அரசு விழாவில் அரசியல் பேசலாமா? என்கிறார்.

தி.மு.க. ஆட்சிகாலத்தில் எத்தனையோ அரசு விழாக்கள் நடந்தன. அந்த விழாக்களில் கருணாநிதி அரசியல் பேசி உள்ளார். இதற்கு ஆதாரங்கள் உள்ளன. இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்று திட்டமிட்டு சதிவலை பின்னப்படுகிறது. இந்த ஆட்சியில் என்ன குறை கண்டார்கள். 6 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் மக்களை சென்று சேர்ந்துள்ளன. அது உங்களுக்கு பொறாமையாக உள்ளது. சிலர் இந்த ஆட்சி கலைந்து விடும் என்கிறார்கள். அது நடக்காது. இந்த ஆட்சி தொடர வேண்டும் என்று தான் மக்கள் விரும்புகிறார்கள். இந்த ஆட்சியை கலைக்க நினைப்பவர்களின் எண்ணம் பகல்கனவாக முடியும். இந்த அரசுக்கு மக்கள் பலம் உள்ளது என்பதற்கு இந்த கூட்டமே சாட்சி.

ஜெயலலிதா ஆட்சியில் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஜெயலலிதா வழியில் மீண்டும் கல்விக்கு அரசு அதிக நிதி ஒதுக்கி வருகிறது. தி.மு.க. ஆட்சியில் என்ன திட்டம் கொண்டு வந்தார்கள் என்று சொல்லுங்கள். நாங்கள் செய்த சாதனைகளை இங்கு கண்காட்சியாக வைத்துள்ளோம். யார் ஆட்சிக்கு வந்தாலும் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். கொண்டு வந்த திட்டங்களை யாராலும் நிறுத்த முடியாது.

ஏதாவது ஒரு பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு போராடி இந்த அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். அதன் மூலம் இந்த அரசு கலையாதா? என்று சிலர் நினைக்கிறார்கள். இந்த ஆட்சி நிச்சயம் கலையாது. ஜெயலலிதாவின் ஆன்மா நம்மை காக்கிறது. நீங்கள் எத்தனை அவதாரம் எடுத்தாலும் ஒருபோதும் இந்த கட்சி, ஆட்சியை அசைக்க முடியாது.

சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்று எதிர்க்கட்சியினர் கூறுகிறார்கள். ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுவிட்டன. அவரது வழியில் நடைபெறும் இந்த அரசும் தொடர்ந்து நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், வாரிய தலைவர்கள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் நன்றி கூறினார். முன்னதாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, எம்.ஜி.ஆரின் தபால் தலையை வெளியிட்டார். 

Next Story