மக்களும், தொண்டர்களும் விரும்பினால் எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு உள்ளது


மக்களும், தொண்டர்களும் விரும்பினால் எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு உள்ளது
x
தினத்தந்தி 20 Sep 2017 11:15 PM GMT (Updated: 20 Sep 2017 7:11 PM GMT)

மக்களும், தொண்டர்களும் விரும்பினால் எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு உள்ளது என்று ஜெ.தீபா கூறினார்.

திருச்சி,

ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் தலைவருமான ஜெ. தீபா நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். தீபாவுடன் அவரது கணவர் மாதவனும் வந்து இருந்தார். விமான நிலையத்தில் கட்சி நிர்வாகிகள் தீபாவுக்கு வரவேற்பு அளித்தனர்.

வரவேற்பு முடிந்த பின்னர் தனியார் ஓட்டலில் தங்கி இருந்த தீபா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா மரணத்தை வைத்துக்கொண்டு சில கட்சிகள் அரசியல் நடத்துகின்றன. நீட் தேர்வு தேவை இல்லை.இதனை தமிழகம் மீது திணிக்க கூடாது.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் கட்சியின் நிலைப்பாடு. அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வினால் மருத்துவ கல்லூரியில் சேர முடியாத மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுத்து தமிழக அரசு அவர்களை படிக்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் போலியான ஆவணங்களை தாக்கல் செய்து உள்ளனர். இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக நாங்கள் முறையாக நீதிமன்றத்தை நாடுவோம். தினகரன் மற்றும் சசிகலா குடும்பம் பற்றிய உண்மைகளை வெளியிடுவேன் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறி இருக்கிறார்.

முதலில் அவர் எவ்வளவு சீக்கிரம் வெளியிட முடியுமோ? அவ்வளவு சீக்கிரம் அதனை வெளியிடவேண்டும். ஏனென்றால் அவருக்கு சில தகவல்கள் தெரிந்து இருக்கலாம்.

சசிகலா குடும்பத்தினருக்கு ஆரம்பத்தில் இருந்தே தி.மு.க.வுடன் தொடர்பு உண்டு. எனவே அந்த குடும்பத்தை கட்சியில் இருந்து நீக்கியே ஆக வேண்டும். எடப்பாடி பழனிசாமி,ஓ.பன்னீர்செல்வமும் சசிகலா குடும்பத்தினருக்கு எதிரான மனநிலையில் செயல்படுவதால் நீங்களும் (தீபா) அந்த அணியுடன் இணைந்து பணியாற்றுவீர்களா? என கேட்கிறீர்கள்.

மக்களும், தொண்டர்களும் விரும்பினால் அதற்கான வாய்ப்பு உள்ளது. காலம் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். அ.தி.மு.க.வில் எல்லோரும் ஒன்றாக இருந்தால் பலம் கூடும். ஆனால் உண்மையிலேயே அவர்கள் சசிகலா குடும்பத்தை விலக்கி இருக்கிறார்களா? பின்னணியில் தூண்டுதல் ஏதாவது இருக்கிறதா? என்பது முதலில் தெரிய வேண்டும்.

திருச்சியில் தினகரன் நடத்திய கூட்டத்துக்கு கூடிய கூட்டம் பணம் கொடுத்து அழைத்து வரப்பட்ட கூட்டம். அது அ.தி.மு.க. கூட்டம் அல்ல. தி.மு.க. கூட்டம். இது நாடறிந்த உண்மை. அவர்கள் சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறார்கள். எதையோ மறைக்க பார்க்கிறார்கள். பணத்தின் மூலம் சதி செய்கிறார்கள்.

எங்கள் கட்சி பலமாக தான் இருக்கிறது. எனது செல்வாக்கு அப்படியே தான் இருக்கிறது. இயக்கத்தை மக்களிடம் எடுத்து சென்று பணி செய்ய இருக்கிறோம். சந்தர்ப்பவாத அரசியலில் எனக்கு உடன்பாடு கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தை சேர்ந்த மாணவி அனிதா நீட் தேர்வினால் மருத்துவ படிப்பில் சேரமுடியாத ஏக்கத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஜெ.தீபா நேற்று மாலை குழுமூரில் உள்ள மாணவி அனிதாவின் வீட்டிற்கு சென்று அவருடைய குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் ரூ.1 லட்சம் நிதி உதவியும் வழங்கினார்.

அப்போது ஜெ.தீபா நிருபர்களிடம் கூறியதாவது:-

மாணவி அனிதாவின் இழப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது. நீட் தேர்வால் மருத்துவ கனவு கலைந்த மாணவ-மாணவிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றால் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும். மாணவி அனிதாவின் தற்கொலைக்கு ஆளுங்கட்சியினரே பொறுப்பேற்று, தீர்வாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Tags :
Next Story