காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு காதலனுடன் பள்ளி மாணவி தற்கொலை?


காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு காதலனுடன் பள்ளி மாணவி தற்கொலை?
x
தினத்தந்தி 21 Sep 2017 12:15 AM GMT (Updated: 20 Sep 2017 9:05 PM GMT)

காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலனுடன் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே வடமதுரை ஊராட்சி சின்ன செங்காத்தாகுளம் கிராமத்தை சேர்ந்தவர் அங்கன். கூலித்தொழிலாளி. இவரது மகள் பவித்ரா (வயது 17). பெரியபாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார்.

இந்த நிலையில், சின்ன செங்காத்தாகுளம் கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரது மகன் சுரேஷ் (வயது 19) என்பவரை பவித்ரா காதலித்து வந்தார். சுரேஷ் லாரி கிளீனராகவும், ஆட்டோ டிரைவராகவும் வேலை செய்து வந்தார். மாணவி பவித்ரா பள்ளி சென்று வரும்போது சுரேஷுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அந்த பழக்கம் காதலாக மாறியது. இதனை அறிந்த பவித்ராவின் பெற்றோர் அவரை கண்டித்தனர்.

நேற்று மதியம் செங்காத்தாகுளம் ஏரிக்கரை அருகே உள்ள காப்பு காட்டில் சிலர் மாடு மேய்த்து கொண்டிருந்தனர். அங்கு ஆண், பெண் இருவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள் பெரியபாளையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். விசாரணையில் தூக்கில் பிணமாக தொங்கியது பவித்ரா மற்றும் சுரேஷ் என்பது தெரியவந்தது.

போலீசார் அவர்களின் உடல்களை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டார்களா? அல்லது யாராவது அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.


Next Story