நாடக, நடிகர் சங்கத்தினரின் குடிசை எரிந்து சாம்பல்


நாடக, நடிகர் சங்கத்தினரின் குடிசை எரிந்து சாம்பல்
x
தினத்தந்தி 20 Sep 2017 11:00 PM GMT (Updated: 20 Sep 2017 9:20 PM GMT)

மணப்பாறையில் நாடக, நடிகர் சங்கத்தினரின் குடிசை எரிந்து சாம்பல் ஆனது.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மஸ்தான் தெரு பகுதியில் நாடக, நடிகர்கள் சங்கம் உள்ளது. இந்த இடத்தை வாடகைக்கு எடுத்து அதில் குடிசை அமைத்து பொருட்களை வைத்துள்ளனர். பல்வேறு வேடங்களில் நடிக்கும் நாடக நடிகர்கள் தங்களின் உடைகள் மற்றும் நாடகங்களுக்கு பயன்படும் பொருட்களை இங்கு வைத்திருப்பார்கள். நாடகத்திற்கு செல்லும் போது மட்டும் தேவையான பொருட்களை எடுத்துச் செல்வார்கள். மற்ற நேரங்களில் அவை சங்க குடிசையில் தான் இருக்கும். ஆனால் நாடக நடிகர் சங்க குடிசைக்கு மின்சாரம் கிடையாது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு நாடக, நடிகர் சங்கத்தின் குடிசை தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. நேரம் ஆக ஆக தீ கொழுந்து விட்டு எரிந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் தங்களின் வீடுகளில் இருந்த தண்ணீரை எடுத்து வந்து ஊற்றினர். இருப்பினும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதுபற்றி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் நிலைய அலுவலர் முத்துக்கிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் கீற்றிலான குடிசை பகுதி என்பதால் முழுவதுமாக எரிந்து விட்டது. இதனால் குடிசைக்குள் உள்ளே இருந்து உடை மற்றும் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் எரிந்து சாம்பலானது.

இது பற்றி தகவல் அறிந்த நாடக நடிகர் சங்க துணைச் செயலாளர் ஜெயலெட்சுமி அங்கு வந்து பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகி விட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி மணப்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் எரிந்து போன பொருட்கள் மற்றும் உடைகளின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மின்சார வசதி இல்லாத குடிசை தீப்பிடித்தது எப்படி? என்று தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசாரும், வருவாய்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாடக, நடிகர் சங்கத்தினரின் குடிசை எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Related Tags :
Next Story