நடுரோட்டில் லாரி பழுதாகி நின்றதால் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு


நடுரோட்டில் லாரி பழுதாகி நின்றதால் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 20 Sep 2017 10:30 PM GMT (Updated: 20 Sep 2017 9:54 PM GMT)

நடுரோட்டில் லாரி பழுதாகி நின்றதால் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கும், அங்கிருந்து தமிழகத்துக்கும் பஸ், கார், லாரி, வேன் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மலைப்பாதை குறுகிய வளைவுகளை கொண்டுள்ளதால் அந்த வழியாக அதிக பாரம் ஏற்றி வரும் கனரக வாகனங்கள் அடிக்கடி பழுதாகி நிற்கின்றன. மேலும் பாரம் தாங்காமல் கவிழ்ந்து விடுகின்றன. இதனால் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

பவானிசாகரில் இருந்து ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி ஒன்று கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகருக்கு சென்று கொண்டிருந்தது. இந்த லாரி திம்பம் மலைப்பாதையில் மதியம் 1 மணி அளவில் 7–வது கொண்ட ஊசி வளைவில் சென்றபோது நடுரோட்டில் பழுதாகி நின்றது.

இதனால் அந்த வழியாக கார், இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்றன. மற்ற வாகனங்கள் செல்ல முடியவில்லை. ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சத்தியமங்கலத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் பண்ணாரி சோதனைச்சாவடியிலும், கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் ஆசனூர் சோதனைச்சாவடியிலும் தடுத்து நிறுத்தப்பட்டன.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலத்தில் இருந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு பழுதான லாரியை சரிசெய்யும் பணி நடந்தது. பிற்பகல் 3 மணி அளவில் லாரி சரிசெய்யப்பட்டது. அதன்பின்னரே போக்குவரத்து நிலமை சீரானது. வாகனங்கள் ஒவ்வொன்றாக புறப்பட்டு சென்றன. லாரி பழுதாகி நின்றதால் திம்பம் மலைப்பாதையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story