அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு ஈரோடு வருகை


அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு ஈரோடு வருகை
x
தினத்தந்தி 20 Sep 2017 11:00 PM GMT (Updated: 20 Sep 2017 9:54 PM GMT)

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு நேற்று ஈரோடு வந்தது.

ஈரோடு,

இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் விவசாயிகளை ஒருங்கிணைக்கும் வகையில் தேசிய அளவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த குழுவினர் நேற்று காலை மதுரையில் விவசாயிகளை சந்தித்துவிட்டு இரவில் ஈரோட்டுக்கு வந்தனர். ஈரோடு மாவட்ட விவசாயிகள் சார்பில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர்களான வி.எம்.சிங் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:- விவசாயத்துக்கு மழையும், தண்ணீரும் குறைந்து வருகிறது. மறுபுறம் விவசாய நில ங்கள் அழிக்கப்பட்டு, பிற பயன்பாட்டுக்கு செல்கிறது. இருந்தும் விவசாய விளை பொருளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. அந்த விலையை வேறு நபர்கள் நிர்ணயிக்கிறார்கள்.இதனால் விவசாயிகள் வாங்கிய கடனை, உரிய காலத்தில் திருப்பி செலுத்த முடியாமல் பல நெருக்கடிக்கு ஆளாகின்றனர்.

பல்வேறு பெரிய நிறுவனங்களுக்கு பல கோடியை தள்ளுபடி செய்யும் அரசுகள், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய தயங்குகிறது. இதன் காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

விவசாயிகளின் தற்கொலையை தடுப்பதுடன், விவசாயிகளுக்கு கடன் விடுதலை வழங்கவும், விளை பொருளுக்கு நியாயமான விலை கிடைக்கவும், விவசாயிகளையும், விவசாய சங்கத்தினரையும் ஒருங்கிணைக்க இந்த பயணம் மேற்கொண்டுள்ளோம்.

இங்கிருந்து கேரளா வழியாக கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களுக்கு செல்கிறோம். வருகிற நவம்பர் மாதம் 20-ந் தேதி பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும்போது, எங்களுடைய கூட்டமும் டெல்லி ராம்லீலா மைதானத்தில் தொடங்கும். பாராளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை எங்கள் கூட்டம் நடக்கும். இந்த கூட்டத்தில் பல மாநில விவசாய தலைவர்கள் ஒன்றிணைக்கப்பட்டு நல்ல தீர்வை காண்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story