கடத்தி சென்ற பள்ளி மாணவியை, 120 அடி பள்ளத்தில் ஓடும் கால்வாயில் தள்ளிய கொடுமை


கடத்தி சென்ற பள்ளி மாணவியை, 120 அடி பள்ளத்தில் ஓடும் கால்வாயில் தள்ளிய கொடுமை
x
தினத்தந்தி 20 Sep 2017 11:19 PM GMT (Updated: 20 Sep 2017 11:19 PM GMT)

சிவமொக்காவில் பள்ளி மாணவியை காரில் கடத்தி சென்று 120 அடி பள்ளத்தில் ஓடும் துங்கா கால்வாயில் மர்மநபர்கள் தள்ளினார்கள்.

சிவமொக்கா,

சிவமொக்காவில் பள்ளி மாணவியை காரில் கடத்தி சென்று 120 அடி பள்ளத்தில் ஓடும் துங்கா கால்வாயில் மர்மநபர்கள் தள்ளினார்கள். அந்த மாணவியை கிராம மக்கள் உதவியுடன் போலீசார் பத்திரமாக மீட்டனர்.

சிவமொக்கா நகர் துங்கா நகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட கோபாலா பகுதியை சேர்ந்தவர் மல்லேசப்பா. பானிபூரி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகள் ஈஸ்வரி (வயது 14). இவள் அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில் நேற்று மாலை ஈஸ்வரி பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாள். அப்போது அவளுக்கு முன்பாக ஒரு கார் வந்து நின்றது.

அந்த காரில் இருந்து முகமூடி அணிந்தப்படி இறங்கிய மர்மநபர்கள், ஈஸ்வரியை வாயை பொத்தி அதே காரில் ஏற்றி அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்றனர். பின்னர் அவர்கள் ஈஸ்வரியை அனுபினகட்டே பகுதிக்கு கடத்தி சென்றனர்.

அந்தப்பகுதியில் 120 அடி பள்ளத்தில் துங்கா கால்வாய் ஓடுகிறது. இந்த நிலையில், மர்மநபர்கள் திடீரென்று ஈஸ்வரியை, 120 அடி பள்ளத்தில் ஓடும் துங்கா கால்வாயில் தள்ளிவிட்டனர். அந்த கால்வாயில் குறைந்தளவு தண்ணீர் கிடந்ததால் ஈஸ்வரி நீரில் மூழ்கி தத்தளித்தாள். மேலும் காப்பாற்றும்படி அவள் கூச்சலிட்டாள். அவளுடைய கூச்சல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தனர்.

அப்போது, கால்வாயில் ஈஸ்வரி தத்தளிப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுகுறித்து துங்கா நகர் போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர். மேலும் அந்தப்பகுதி மக்களும் அங்கு குவிந்தனர்.

இதையடுத்து தீயணைப்பு படையினர், போலீசாரும் அந்த கிராம மக்கள் உதவியுடன் சேர்ந்து கயிறு கட்டி 120 அடி பள்ளத்தில் உள்ள கால்வாயில் இறங்கினர். பின்னர், அவர்கள் ரப்பர் மிதவையை தண்ணீரில் போட்டு, ஈஸ்வரியை மீட்டு அதில், அமர வைத்தனர். இதையடுத்து போலீசார், ஈஸ்வரியை பத்திரமாக மேலே கொண்டு சென்றனர். கால்வாய் தண்ணீரில் தத்தளித்ததால் சோர்வடைந்து இருந்த ஈஸ்வரியை போலீசார் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், 120 அடி பள்ளத்தில் ஓடும் துங்கா கால்வாயில் மாணவி தள்ளிவிடப்பட்டாள். அதிர்ஷ்டவசமாக கால்வாயில் குறைந்த அளவு தண்ணீர் கிடந்தது. கால்வாயில் அதிகளவு தண்ணீர் ஓடியிருந்தாலோ அல்லது தண்ணீரே இல்லை என்றாலோ மாணவியை உயிருடன் மீட்டிருக்க முடியாது என்றார்.


Next Story