சட்டம்–ஒழுங்கை பாதுகாக்க போலீசார் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்


சட்டம்–ஒழுங்கை பாதுகாக்க போலீசார் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 20 Sep 2017 11:30 PM GMT (Updated: 20 Sep 2017 11:30 PM GMT)

தட்சிண கன்னடா மாவட்டத்தில் சட்டம்–ஒழுங்கை பாதுகாக்க போலீசார் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மந்திரி ராமலிங்கரெட்டி கூறினார்.

மங்களூரு,

கர்நாடக போலீஸ் மந்திரியாக பதவியேற்ற பிறகு முதல்முறையாக நேற்று ராமலிங்கரெட்டி மங்களூருவுக்கு வந்தார். மங்களூரு மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மந்திரி ராமலிங்கரெட்டி கலந்துகொண்டு, அவர்களுக்கு சில அறிவுரைகளையும், ஆலோசனையையும் வழங்கினார். பின்னர் போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்கிய ஆலோசனைகள் குறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

தட்சிண கன்னடா மாவட்டத்தில் சட்டம்–ஒழுங்கை பாதுகாக்க போலீசார் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் அமைதியை சீர்குலைக்க நினைப்பவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். கந்துவட்டிக்கு பணம் கொடுத்து பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தட்சிண கன்னடா மாவட்டத்தில் இரவு நேர ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும்.

வீடுகளில் தங்கும் விடுதி நடத்துபவர்களை கண்காணித்து, அவர்கள் விதிமுறைகளை பின்பற்றுகிறார்களா என்று ஆய்வு செய்ய வேண்டும். வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

மாணவர்களை பாதுகாக்க போலீசார் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். பள்ளி–கல்லூரி மாணவிகள், கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களின் பாதுகாப்பில் போலீசார் தனி கவனம் செலுத்த வேண்டும். தட்சிண கன்னடா மாவட்டத்தில் எந்த போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறதோ, அதற்கு அந்த போலீஸ் நிலையத்தின் சப்–இன்ஸ்பெக்டர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்வதில் போலீசார் தாமதம் காட்டக்கூடாது.

வரதட்சணை மற்றும் கற்பழிப்பு வழக்குகள் மீண்டும் நடக்காதவாறு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். மங்களூருவில் கஞ்சா விற்பனை அதிகமாக உள்ளது. அதனை தடுக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். பொதுமக்களுடன் போலீசார் நெருங்கி பழக வேண்டும். விபசாரம் மற்றும் சூதாட்டங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

புத்தூரில் இந்து அமைப்பின் தலைவர் ஜெகதீஷ் காரந்த் என்பவர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டருக்கு எதிராக பேசி உள்ளார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் சிறப்பு விசாரணை குழுவினர் குற்றவாளியை நெருங்கிவிட்டனர். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். கலபுரகி கொலை வழக்கு குற்றவாளிகளும் விரைவில் பிடிபடுவார்கள்.

சிறைச்சாலையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் சப்ளை செய்யப்படுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். பா.ஜனதாவினரின் தொலைப்பேசி உரையாடலை நாங்கள் ஒட்டுக்கேட்கவில்லை. இந்த வி‌ஷயத்தில் பா.ஜனதாவினர் தேவையில்லாத வதந்தியை பரப்புகிறார்கள். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளேன்.

மூடபித்ரியில் தனியார் பள்ளியில் தற்கொலை செய்துகொண்ட பேட்மிண்டன் வீராங்கனை காவ்யா வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதுதொடர்பான அறிக்கை வந்தபிறகு, அந்த தகவலை போலீஸ் கமி‌ஷனர் உங்களிடம் (நிருபர்கள்) தெரிவிப்பார். போலீசார் வழக்குகளை தாமதப்படுத்தாமல் உடனடியாக முடிக்க வேண்டும். கத்ரி போலீஸ் நிலையத்தில் நளின்குமார் கட்டீல் எம்.பி. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு மந்திரி ராமலிங்கரெட்டி கூறினார்.



Next Story