‘நீட்’ தேர்வு கண்டிப்பாக நடத்த வேண்டும் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


‘நீட்’ தேர்வு கண்டிப்பாக நடத்த வேண்டும் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 21 Sep 2017 12:03 AM GMT (Updated: 21 Sep 2017 12:03 AM GMT)

‘நீட்’ தேர்வு பிரச்சினையில் மாணவர்களின் கல்வியில் அரசியலை வைத்து விளையாடக்கூடாது என பள்ளிகொண்டா வந்த பா.ஜ.க.மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

அணைக்கட்டு,

பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் உள்ள உத்திரரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

சட்டமன்ற தேர்தல் நடந்து 1 வருடம் முடிந்துள்ளது. மீண்டும் தேர்தலை நடத்த அ.தி.மு.க. விரும்பவில்லை. அப்படியே தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். உள்ளாட்சி நிர்வாகம் சீர்குலைந்துள்ளது. அரசு அதிகாரிகளை வைத்துக்கொண்டு அனைத்து வேலைகளையும் செய்துவிட முடியாது.

உள்ளாட்சி நிர்வாகம் சிறப்பாக நடைபெற உள்ளாட்சி தேர்தல் அவசியம் நடத்த வேண்டும். தமிழக மாணவ, மாணவிகளின் கல்வியிலும் வாழ்க்கையிலும் அரசியலை வைத்து விளையாடாதீர்கள் என்பது என்னுடைய கருத்து. ‘நீட்’ தேர்வு கட்டாயம் அமைய வேண்டும்.

காவிரி மேலாண்மை குழு அமைக்க வேண்டுமென்பதுதான் பாரதீய ஜனதா கட்சியின் வலிமையான கருத்து. 2007–ம் ஆண்டு உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி அப்போது இருந்த அரசு அதை விரைவாக செயல்படுத்தியிருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story