திருச்செந்தூரில் ஓட்டல் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் உதவி கலெக்டர் தலைமையில் நடந்தது


திருச்செந்தூரில் ஓட்டல் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் உதவி கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 21 Oct 2017 8:00 PM GMT (Updated: 21 Oct 2017 3:50 PM GMT)

திருச்செந்தூரில் ஓட்டல் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் உதவி கலெக்டர் கணேஷ்குமார் தலைமையில் நடந்தது.

திருச்செந்தூர்,

திருச்செந்தூரில் ஓட்டல் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் உதவி கலெக்டர் கணேஷ்குமார் தலைமையில் நடந்தது.

ஆலோசனை கூட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் ஓட்டல் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. உதவி கலெக்டர் கணேஷ்குமார் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:–

ஓட்டல்கள், டீக்கடைகள், பேக்கரிகளில் சுகாதாரமான முறையில் உணவு, தின்பண்டங்களை விற்பனை செய்ய வேண்டும். கடைகளின் முன்பாக கடைக்காரர்களே குப்பை தொட்டி வைத்து, அதில் குப்பைகளை போட வேண்டும். குப்பைகளை சாலையோரம் கொட்டிச் செல்ல கூடாது. ஓட்டல்கள், டீக்கடைகளில் பொதுமக்களுக்கு வெந்நீர் வழங்க வேண்டும். கடைகளின் சுற்றுப்புறங்களில் கழிவுநீர் தேங்க கூடாது. காலாவதியான பொருட்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். அதிகாரிகளின் சோதனையில் காலாவதியான பொருட்களை கண்டறிந்தால், உணவு பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்படும்.

நடவடிக்கை

ஓட்டல்களில் கைகழுவும் இடங்களில் சோப்பு, கை துடைக்க துண்டு வைத்திருக்க வேண்டும். ஓட்டல்களில் நோயாளிகளை பணியில் அமர்த்த கூடாது. ஓட்டல்களில் பணியாற்றும் பணியாளர்கள் மருத்துவ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பணியாளர்கள் கையுறை, தலைக்கவசம் அணிய வேண்டும். டீத்தூளில் சாயம் கலக்க கூடாது. தின்பண்ட கவரில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிட வேண்டும். இவற்றை மீறுகிறவர்கள் மீது உணவு பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்கள் பொன்முத்து ஞானசேகர் (திருச்செந்தூர்), குருசாமி (காயல்பட்டினம்), வருவாய் ஆய்வாளர் செந்தில்முருகன், கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story