11 ஆண்டுகளாக தேடப்பட்ட மாவோயிஸ்டு பகத்சிங் சேலத்தில் சரண்


11 ஆண்டுகளாக தேடப்பட்ட மாவோயிஸ்டு பகத்சிங் சேலத்தில் சரண்
x
தினத்தந்தி 27 Oct 2017 11:00 PM GMT (Updated: 27 Oct 2017 6:37 PM GMT)

11 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த மாவோயிஸ்டு பகத்சிங் நேற்று சேலம் போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் சரண் அடைந்தார்.

சேலம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சிங்காரப்பேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பாலன். இவருடைய மகன் பகத்சிங்(வயது32). மாவோயிஸ்டான இவர், கடந்த 11 ஆண்டுகளாக ‘கியூ‘ பிரிவு போலீசாரால் தேடப்பட்டு வந்தார். இந்த நிலையில் வக்கீல்கள் அரிபாபு, சுதாகர் ஆகியோர் உதவியுடன் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் முன்னிலையில் நேற்று மாலை மாவோயிஸ்டு பகத்சிங் சரண் அடைந்தார்.

போலீஸ் சூப்பிரண்டு ராஜனிடம், மாவோயிஸ்டு பகத்சிங் கூறுகையில்,‘‘தேடப்படும் குற்றவாளியாக கருதி கியூ பிரிவு போலீசார் என்னை தேடிவருவதால், என்னால், நல்லமுறையில் வாழமுடியவில்லை. எனவே, உங்கள் முன்னிலையில் சரண் அடைகிறேன்‘‘ என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2002–ம் ஆண்டு ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டமாக இருந்தபோது ஊத்தங்கரை அருகே உள்ள சின்னகரைப்பட்டி ஒன்னகரை வனப்பகுதியில் நக்சலைட்டுகள் ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று துப்பாக்கி சூடு நடத்தி நக்சலைட்டுகள் கும்பலை சுற்றி வளைத்தனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். 38 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது அந்த கும்பலில் இருந்த பக்தசிங்கிற்கு 17 வயது ஆகும். பகத்சிங் சிறார் பள்ளியில் அடைக்கப்பட்டு 2006–ம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவானார்.

பின்னர் 2008–ம் ஆண்டு கொடைக்கானல் மலைப்பகுதியில் ஆயுதப்பயிற்சியில் பகத்சிங் உள்ளிட்ட பலர் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. 2016–ம் ஆண்டு சட்டவிரோத செயலில் ஈடுபட்டதாக சேலம் கியூ பிரிவு போலீசிலும் பகத்சிங் மீது வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏறத்தாழ 11 ஆண்டுகளாக கியூ பிரிவு போலீசாரால் தேடப்பட்டு வந்த அவர், தற்போது போலீஸ் சூப்பிரண்டு ராஜன் முன்னிலையில் சரண் அடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து மாவோயிஸ்டு பகத்சிங்கிடம் திருப்பத்தூர் தலைமையிட கியூ பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீநாத், இன்ஸ்பெக்டர்கள் சந்திரமோகன்(கோவை), கோகிலாம்பாள்(சேலம்) ஆகியோர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

முன்னதாக சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் மாவோயிஸ்டு பகத்சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில்,‘‘நான் தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறேன். என்னுடன் வேலைபார்த்த 2 பேரை போலீசார் பிடித்து சென்று விட்டனர். அதே வேளையில் என்னை போலீசார் ‘என்கவுண்டர்‘ மூலம் தீர்த்து கட்ட திட்டமிட்டதை அறிந்து சரண் அடைய வந்துள்ளேன்‘‘ என்றார்.


Next Story