டெங்கு தடுப்பு நடவடிக்கை: துப்புரவு பணியை தீவிரமாக கண்காணிக்க கலெக்டர் உத்தரவு


டெங்கு தடுப்பு நடவடிக்கை: துப்புரவு பணியை தீவிரமாக கண்காணிக்க கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 28 Oct 2017 8:33 AM GMT (Updated: 28 Oct 2017 8:33 AM GMT)

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் டெங்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர்,

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் அனைத்து வட்ட மற்றும் வட்டார அளவில் தினசரி நடைபெறும் தூய்மைப்பணிகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட அலுவலர்களுடனான டெங்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் சிவஞானம் பேசும் போது தெரிவித்ததாவது:-

சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள், குப்பை சேருமிடம் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களின் குடியிருப்பு பகுதிகள் ஆகிய பகுதிகளில் நகராட்சி, ஊராட்சி துப்புரவுப் பணியாளர்களைக் கொண்டு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதை மேற்பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும். வியாழக்கிழமை தோறும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவாஎன்பதை ஆய்வு செய்ய வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளில் வாரம் ஒருமுறை குளோரினிங் செய்யபட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

அதற்கான பணியாளர்கள் தங்கள் பணிகளை சரியான முறையில் மேற்கொண்டுள்ளனரா என்பதையும், கொசுவினை ஒழிக்க அதற்குரிய எந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். ஊராட்சி, பேரூராட்சிகளுக்கு தனித்தனியாக கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். நகராட்சி பகுதிகளில் 5 வார்டுகளுக்கு 1 கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் ஏற்பட்டால் என்ன காரணம் என்று அப்பகுதிக்கே சென்று விசாரித்து எந்த விதமான காய்ச்சல் என கண்காணிக்க வேண்டும். காலை 6 மணிக்கு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தூய்மை பணிகள் மேற்கொண்டு டெங்கு கொசுக்கள் பரவா வண்ணம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியின் தூய்மை பணிகள் குறித்து டெங்கு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள நோய்தடுப்பு மற்றும் பொதுசுகாதாரதுறை அலுவலக பகுதியில் டெங்கு கொசு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை கலெக்டர் சிவஞானம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

Next Story