வாடகை பாக்கி வைத்திருந்த நகராட்சி கடை வியாபாரிகளிடம் ஒரே நாளில் ரூ.10 லட்சம் வசூல்


வாடகை பாக்கி வைத்திருந்த நகராட்சி கடை வியாபாரிகளிடம் ஒரே நாளில் ரூ.10 லட்சம் வசூல்
x
தினத்தந்தி 28 Oct 2017 10:01 AM GMT (Updated: 28 Oct 2017 10:01 AM GMT)

ஊட்டி நகராட்சியில் வாடகை பாக்கி வைத்திருந்த கடை வியாபாரிகளிடம் ஒரே நாளில் ரூ.10 லட்சம் வசூல் செய்யப்பட்டது.

ஊட்டி,

ஊட்டி நகராட்சிக்கு அதிக வருமானத்தை ஈட்டி கொடுப்பதில் நகராட்சி மார்க்கெட் மற்றும் வணிக வளாகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நகராட்சி மார்க்கெட்டில் 1000-க்கும் மேற்பட்ட கடைகளும், மணிக்கூண்டு, புளுமவுண்டன், சேரிங்கிராஸ், எட்டின்ஸ் சாலை, பிங்கர்போஸ்ட், காந்தல் ஆகிய பகுதிகளில் உள்ள வணிக வளாகங்களில் 300-க்கும் மேற்பட்ட கடைகளும் உள்ளன.

இந்த கடைகளுக்கு கடந்த 2016-ம் ஆண்டு வரை குறைந்தபட்ச வாடகை விதித்ததன் மூலம் ஆண்டுக்கு ரூ.2 கோடியே 70 லட்சம் நகராட்சிக்கு வருமானமாக கிடைத்து வந்தது. பார்சன்ஸ்வேலி அணையில் இருந்து ஊட்டி நகருக்கு குடிநீர் எடுக்கப்படுவதால், நகராட்சி மின்வாரியத்துக்கு ரூ.8 கோடி பாக்கி செலுத்த வேண்டி உள்ளது. இதை 2 மாதத்துக்கு ஒரு முறை செலுத்த முடியாததால், ஒவ்வொரு முறையும் மின்வாரியம் ரூ.40 லட்சம் நகராட்சிக்கு அபராதம் விதிக்கிறது.

மேலும் வருமானம் குறைவாக வந்ததால், நகராட்சி பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. வளர்ச்சி பணிகளையும் மேற்கொள்ள முடியாத சூழ்நிலை நிலவியது. அதன் காரணமாக ஊட்டி முன்னாள் நகராட்சி கமிஷனர் சத்தார் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் நகராட்சி கடைகளை ஆய்வு செய்து, ஒவ்வொரு கடைக்கும் அளவின் அடிப்படையில் வாடகை கட்டணத்தை உயர்த்தினர்.

இதன் மூலம் நகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.12 கோடி வருமானம் கிடைக்கும் என்று அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மேலும் வாடகைக்கு இணையான டெபாசிட் தொகை ரூ.12 கோடி செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது உயர்த்தப்பட்ட வாடகையை செலுத்த இயலாது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று, அப்போதைய நகர மன்றம் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், உயத்தப்பட்ட வாடகை கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்தது.

இதற்கிடையே, வியாபாரிகள் சங்கம் சார்பில் அரசுக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீடு ஏற்றுக்கொள்ளப்படாததால், முன்னாள் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) டாக்டர் பிரபாகர் 1,200 கடைகளுக்கு வாடகை பாக்கியை செலுத்தக்கோரி நோட்டீசு அனுப்பினார். அப்போது பலர் வாடகையை செலுத்துவதாக ஒப்புதல் அளித்தனர். ஆனால், கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தற்போது வரை நகராட்சி சொந்தமான கடைகளில் இருந்து வாடகை பாக்கி செலுத்தப்பட வில்லை.

இந்த நிலையில் நேற்று நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ரவி தலைமையில், நகராட்சி வருவாய் அதிகாரிகள் கடைகளின் வாடகை பாக்கி தொகையை வசூலிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அவர்கள், கடை, கடையாக நேரில் சென்று வாடகை பாக்கியை வசூல் செய்தனர். அப்போது கடை வியாபாரிகள் காசோலையாகவும், பணமாகவும் அதிகாரிகளிடம் வாடகைபாக்கி தொகையை செலுத்தினர்.

இதுகுறித்து நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ரவி கூறியதாவது:-

தற்போது நகராட்சியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள போதிய நிதி இல்லை. எனவே, நகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட் மற்றும் வணிக வளாகங்களில் இயங்கி வரும் கடைகளில் இருந்து வாடகை பாக்கியை வசூலிக்கும் பணி நடந்தது. முதல் கட்டமாக ஒரே நாளில் வியாபாரிகளிடம் இருந்து ரூ.10 லட்சம் வசூலிக்கப்பட்டு உள்ளது. கடைகளில் வாடகை பாக்கி வசூலிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story