அகில இந்திய ஒலிம்பிக் போட்டிகளுக்கு வீரர்கள் முதல்நிலை தகுதி தேர்வு 1,887 பேர் பங்கேற்பு


அகில இந்திய ஒலிம்பிக் போட்டிகளுக்கு வீரர்கள் முதல்நிலை தகுதி தேர்வு 1,887 பேர் பங்கேற்பு
x
தினத்தந்தி 28 Oct 2017 10:45 PM GMT (Updated: 28 Oct 2017 6:50 PM GMT)

பெரம்பலூரில் அகில இந்திய ஒலிம்பிக் போட்டிகளுக்கு வீரர்கள் முதல்நிலை தகுதி தேர்வு போட்டிகள் நேற்று நடந்தன. இதில் 1,887 பேர் பங்கேற்றனர்.

பெரம்பலூர்,

2020-ம் ஆண்டில் ஜப்பானில் டோக்கியோ நகரிலும் மற்றும் 2024-ம் ஆண்டில் நடைபெற உள்ள சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளில் தடகள போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்பதற்காக நாடுமுழுவதும் 29 மாநிலங்களில் ஏறத்தாழ 45 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த 11-14 வயது மற்றும் 15-17 வயது வரையிலான மாணவ-மாணவிகளை மாவட்ட, மாநில அளவில் மற்றும் 3-வது கட்டமாக தேசிய அளவில் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணி தேசிய யுவ கூட்டுறவு இணையம் மற்றும் கெயில் மூலம் தேர்வு முகாம் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது.

இதுவரை புதுச்சேரி, தஞ்சை, கோவை, மதுரை, சென்னை ஆகிய நகரங்களில் அந்தந்த சுற்றுப்பகுதியில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் 6-வது முகாம் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வீரர்கள், வீராங்கனைகள் முதல்நிலை தகுதி தேர்வு போட்டிகள் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு மாநில பிரதிநிதி கதலி நரசிங்க பெருமாள் தலைமை தாங்கினார். பெரம்பலூர் மாவட்ட பிரதிநிதி திருமாவளவன் வரவேற்றார். தகுதி தேர்வுக்கான ஓட்டப்பந்தய போட்டிகளை தனலட்சுமி சீனிவாசன் குழுமத்தின் நிறுவன தலைவர் சீனிவாசன், தந்தை ரோவர் கல்விக்குழுமத்தின் மேலாண்தலைவர் வரதராஜன், ஸ்ரீராமகிருஷ்ணா கல்விக்குழுமத்தின் நிறுவன தலைவர் சிவசுப்ரமணியம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இதில் தேசிய அத்லடிக் பயிற்சியாளர் பாண்டீஸ்வரி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அலுவலர் ராமசுப்ரமணியராஜா, பெரம்பலூர் விக்டரி அரிமா சங்க தலைவர் நாரணமங்கலம் செல்வராஜ், தேர்வு முகாமிற்கான பிற மாவட்டங்களின் பிரதிநிதிகள் சிவாயவாசி, ராஜேஷ்குமார், பிரகாஷ், தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டர்் மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயங்கள் நடத்தப்பட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் பெரம்பலூர், அரியலூர், கரூர், நாமக்கல், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை சேர்ந்த ஏறத்தாழ 1,887 பேர் கலந்து கொண்டு தங்களது தனித்திறனை வெளிப்படுத்தினர். இதில் மாணவி உள்பட 10 வீரர்கள் மாநில அளவிலான தகுதி போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடிவில் நாமக்கல் மாவட்ட பிரதிநிதி பிரபு நன்றி கூறினார். 

Next Story