ஆக்கிரமிப்புகள் அகற்றம் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததால் நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை


ஆக்கிரமிப்புகள் அகற்றம் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததால் நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 28 Oct 2017 10:45 PM GMT (Updated: 28 Oct 2017 6:50 PM GMT)

பெரம்பலூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இடங்களை ஆக்கிரமித்து கடைகளின் விளம்பர பலகை உள்ளிட்டவை இருக்கிறதா? என்பது குறித்தும், சாலையை ஆக்கிரமித்து கடைகளின் முன்புற பகுதியில் கொட்டகை ஏதும் அமைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் பெரம்பலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சக்திவேல் தலைமையில், உதவி கோட்ட பொறியாளர் பாபுராமன், உதவி பொறியாளர் ராஜா உள்பட நெடுஞ்சாலைத்துறையினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உத்தரவின் பேரில் சாலை ஆய்வாளர்கள் மற்றும் சாலை பணியாளர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் பெரம்பலூர் சங்கு பேட்டையிலிருந்து பெரம்பலூர்-ஆத்தூர் ரோடு சுடுகாடு வரை சாலையை ஆக்கிரமித்தபடி இருந்த கடைகள், நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். விளம்பர பலகை, பேனர்கள் உள்ளிட்டவற்றை பணியாளர்களே கழற்றி அப்புறப்படுத்தினர். ஆக்கிரமிப்பில் இருந்து கைப்பற்றியதை எல்லாம் ஒரு லாரியில் ஏற்றினர்.

சிமெண்டு தளத்தை தோண்டி எடுத்து...

சாலையை ஒட்டியபடி இருந்த சிமெண்டு சிலாப்பு, தளங்கள் உள்ளிட்டவை பொக்லைன் மூலம் தோண்டி எடுத்து அப்புறப்படுத்தப்பட்டன. சாலையை ஆக்கிரமித்து இருந்த சில தனியார் கட்டிடங்களின் பகுதியும் பெயர்த்து எடுக்கப்பட்டன. சில கடைகளின் முன்பு இருந்த தற்காலிக கீற்று கொட்டகையும் பிரித்து எடுத்து அப்புறப்படுத்தப்பட்டது. ஆக்கிரமிப்பு எடுக்கும் தகவல் சிறிது நேரத்தில் காட்டுத்தீ போல் பரவ ஆரம்பித்ததால் சில கடைக்காரர்கள் தாமாகவே முன்வந்து ஆக்கிரமிப்பில் இருந்தவற்றை எடுத்து வைத்து கொண்டனர். ஆக்கிரமிப்பை அகற்றும் அதிகாரிகளுக்கு பாதுகாப்புக்காக பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி உள்பட போலீசார் உடன் வந்தனர்.

மேலும் காமராஜர் வளைவு பகுதி, பெரம்பலூர்-துறையூர் ரோடு, வடக்குமாதவி ரோட்டிலும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை நெடுஞ்சாலைத்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டனர். பெரம்பலூரில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.

போக்குவரத்தினை எளிமைப்படுத்தும் பொருட்டே...

பெரம்பலூரில் நடந்த ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது வழக்கமானது தான்.

அந்த வகையில் தான் இன்று (நேற்று) ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டிருக்கிறது. கடைக்காரர்கள் முதலில் தங்கள் வசதிக்காக தற்காலிக கீற்று கொட்டகை அமைப்பது, வாகனம் நிறுத்த சிமெண்டு தளம் வைப்பது, விளம்பர பதாகை வைப்பது உள்ளிட்டவற்றால் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி விட்டு செல்வதை பல இடங்களில் நாம் பார்க்க தான் செய்கிறோம். இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைவதுடன் விபத்து நிகழவும் வாய்ப்பிருக்கிறது. இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை சிலருக்கு கடினமாக தான் இருக்கும். எனினும் இது போக்குவரத்தினை எளிமைப்படுத்துவதற்கான நடவடிக்கை என்பதை சாலையோரமாக கடைகள், நிறுவனங்கள் வைத்திருப்போர் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். 

Next Story