செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரி அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டம்


செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரி அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Oct 2017 11:00 PM GMT (Updated: 28 Oct 2017 7:41 PM GMT)

செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரி தஞ்சையில் அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை அருகே உள்ள செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரி தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்துக்கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார்.

தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், முன்னாள் மத்தியமந்திரி மணிசங்கர் அய்யர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் திருஞானம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் மனோகரன், வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட தலைவர் கணேசன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் உதயகுமார், திராவிடர் கழக மாவட்ட தலைவர் அமர்சிங், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர்ராஜ் ஆகியோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்திற்கு மத்தியஅரசு சர்வதேச தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்தது. அப்போதைய முதல்-அமைச்சராக இருந்த மறைந்த ஜெயலலிதா தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி, ஈரோடு பெருந்துறை, செங்கல்பட்டு, புதுக்கோட்டை, மதுரை என 5 இடங்களை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக தேர்வு செய்து அறிவித்தார். இதில் அனைத்து வசதிகளும் கொண்ட செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கலாம் என தனது விருப்பமாக ஜெயலலிதா தெரிவித்தார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழகத்தின் கோரிக்கையை அளித்து பேசியபோது செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை அளித்துள்ளார். மத்தியக்குழுவும் நேரில் வந்து ஆய்வு நடத்தியுள்ளது. எனவே செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதை மத்திய-மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

இதில் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர்கள் து.கிருஷ்ணசாமி வாண்டையார், லோகநாதன், பி.ஜி.ராஜேந்திரன், மாவட்ட செய்தி தொடர்பாளர் வக்கீல் கோ.அன்பரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் தி.மு.க. நகர செயலாளர் நீலமேகம் நன்றி கூறினார். 

Next Story