திம்பம் மலைப்பாதையில் நின்றிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியது; டிரைவர் காயம்


திம்பம் மலைப்பாதையில் நின்றிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியது; டிரைவர் காயம்
x
தினத்தந்தி 28 Oct 2017 10:00 PM GMT (Updated: 28 Oct 2017 7:42 PM GMT)

திம்பம் மலைப்பாதையில் நின்றிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி டிரைவர் காயம் அடைந்தார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாளவாடி,

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்துக்கு சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த தர்மலிங்கம் ஓட்டினார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதை 9–வது கொண்டை ஊசி வளைவில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணி அளவில் சென்று கொண்டிருந்தது.

அப்போது முன்னால் வாழையாறில் இருந்து ஆசனுக்கு பஞ்சு பேல் ஏற்றிச்சென்ற மற்றொரு லாரி பழுதாகி ரோட்டோரம் நின்றிருந்தது. இந்த லாரி மீது காய்கறி ஏற்றிச்சென்ற லாரி எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் 2 லாரிகளும் சேதம் அடைந்தது. டிரைவர் தர்மலிங்கம் லேசான காயம் அடைந்தார். இவர் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பழுதான லாரியில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

இந்த விபத்தால் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. ரோட்டின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சத்தியமங்கலத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் பண்ணாரி சோதனைச்சாவடியிலும், கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் ஆசனூர் சோதனைச்சாவடியிலும் தடுத்து நிறுத்தப்பட்டன.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஆசனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காய்கறி ஏற்றிச்சென்ற லாரியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனார். நள்ளிரவு 2.30 மணி அளவில் லாரி மீட்கப்பட்டது. அதன்பின்னரே அந்த லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

அதைத்தொடர்ந்து ரோட்டின் இருபுறத்தில் இருந்து வாகனங்கள் ஒரே நேரத்தில் செல்ல தொடங்கின. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். நேற்று காலை 8 மணி அளவில் போக்குவரத்து நெரிசல் சீரானது.


Next Story