திண்டுக்கல் அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மண்பானை ஓடுகள் கண்டுபிடிப்பு


திண்டுக்கல் அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மண்பானை ஓடுகள் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 28 Oct 2017 11:00 PM GMT (Updated: 28 Oct 2017 7:55 PM GMT)

திண்டுக்கல் அருகே சங்ககால தமிழர்கள் பயன்படுத்திய 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மண்பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

திண்டுக்கல்,

திண்டுக்கல்லில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, பழனியாண்டவர் கலைக்கல்லூரி பேராசிரியர்கள் அசோகன், மனோகரன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:–

திண்டுக்கல் அருகே பாடியூரில் தரையில் இருந்து சுமார் 30 அடி உயரம் கொண்ட மண்திட்டு ஒன்று உள்ளது. இது சுமார் 2 ஆயிரத்து 500 முதல் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சங்ககால மக்களின் வாழ்வியல் தடயங்களை சுமந்துகொண்டு இருக்கிறது. அதற்குள், முற்றிலும் சிதிலம் அடைந்த சங்ககால கோட்டை ஒன்று புதைந்துள்ளது. அந்த கோட்டை சுமார் 4 முதல் 5 ஏக்கர் வரை இருந்திருக்கலாம். அதை சுற்றிலும் மக்கள் வசித்திருக்கிறார்கள்.

அந்த கோட்டை, படைவீரர்களின் முகாமாக திகழ்ந்திருக்கிறது. இதுவே பாடியூர் என அந்த ஊருக்கு பெயர் கிடைக்க காரணமாக இருந்துள்ளது. இங்கு கடுமையான போர்கள் நடந்திருப்பதும் தெரியவருகிறது. அடுத்தடுத்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டால் இதற்கான பதில் கிட்டிவிடும்.

தற்போது, பாடியூரில் சிதிலம் அடைந்த கோட்டை இருக்கும் பகுதியில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சங்ககால தமிழர்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள் கிடைத்துள்ளன. மண்ணால் ஆன சமையல் பாத்திரங்கள், சுடுமண் பொம்மைகள், பெண்களின் காதணிகள், அகல் விளக்குகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

மேலும், இறந்தவர்களை புதைப்பதற்கான முதுமக்கள் தாழிகள், கருப்பு சிவப்பு பானை ஓடுகள், ஈமச்சடங்கு மண்பாண்டங்கள் கிடைத்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை நகக்குறிகள் நிறைந்த அழகிய வேலைப்பாடுகள் கொண்டவை. ஆனால், அனைத்தும் நொறுங்கிய நிலையில் கிடைத்துள்ளன.

பாடியூரில் கிட்டத்தட்ட கீழடியை போல வரலாற்று தடயங்கள் ஏராளம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, இங்கு அரசு அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story