‘மெர்சல்’ சினிமா பட பேனரை சீரமைத்தபோது மின்சாரம் தாக்கி 2 தொழிலாளிகள் காயம்


‘மெர்சல்’ சினிமா பட பேனரை சீரமைத்தபோது மின்சாரம் தாக்கி 2 தொழிலாளிகள் காயம்
x
தினத்தந்தி 28 Oct 2017 11:15 PM GMT (Updated: 28 Oct 2017 8:33 PM GMT)

செங்குன்றத்தில் ‘மெர்சல்’ சினிமா பட பேனர் சரி செய்யும் பணியில் ஈடுபட்ட 2 தொழிலாளிகள் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

செங்குன்றம்,

செங்குன்றம் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தியேட்டரில் நடிகர் விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்காக தியேட்டர் அருகே படத்தின் பெரிய கட்-அவுட்கள், பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதில் ஒரு பேனர் சாய்வாக இருந்தது.

இதைத்தொடர்ந்து தியேட்டர் உரிமையாளர் சாய்ந்த பேனரை சரி செய்வதற்காக ஆந்திர மாநிலம் புலிகுன்றம் கிராமத்தை சேர்ந்த நாகூர் (வயது 40), செல்வம் (42) உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை அழைத்து வந்தார். அவர்கள் சாய்ந்த பேனரை நேற்று சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மின்சாரம் தாக்கி 2 பேர் காயம்

அப்போது அருகில் இருந்த உயர் மின் அழுத்த மின்கம்பியில் பேனர் உரசியது. இதில் பேனரை பிடித்திருந்த நாகூர், செல்வம் ஆகியோர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர்கள் 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விசாரணை

இதுகுறித்து செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேந்தர் வழக்கு பதிவு செய்து தியேட்டர் உரிமையாளர், மேலாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வருவாய் துறையினரும் இதுபற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Next Story