எண்ணூர் கழிமுக நீர் அடைப்பு பகுதியில் சீரமைப்பு பணிகள் திருவள்ளூர் கலெக்டர் தகவல்


எண்ணூர் கழிமுக நீர் அடைப்பு பகுதியில் சீரமைப்பு பணிகள் திருவள்ளூர் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 28 Oct 2017 11:30 PM GMT (Updated: 28 Oct 2017 8:37 PM GMT)

எண்ணூர் கழிமுக நீர் அடைப்பு பகுதியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்தார்.

கும்மிடிப்பூண்டி, 

திருவள்ளூர் மாவட்டம் புதுகும்மிடிப்பூண்டியில் கொசு ஒழிப்பு பணிகள் தொடர்பாக கலெக்டர் சுந்தரவல்லி நேற்று அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். வீடு, வீடாக சென்று அவர்கள் பயன்படுத்தி வரும் தண்ணீர் தொட்டி, பழைய பொருட்களை தேக்கி வைத்திருக்கும் சுற்றுப்புற இடங்களை ஆய்வு செய்து டெங்கு தொடர்பான விழிப்புணர்வை அந்த பகுதி மக்களுக்கு அவர் எடுத்துரைத்தார்.

மேலும் நோய் பரவும் காரணிகளாக உள்ள பொருட்களை சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து உடனே அகற்றிடவும் அவர் உத்தரவிட்டார். அவருடன் அதிகாரிகள் உடன் சென்றனர்.

கமல்ஹாசன் புகார்

அப்போது, சென்னை எண்ணூர் கழிமுக பகுதி சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் கூறியது குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு கலெக்டர் சுந்தரவல்லி பதில் அளித்து கூறியதாவது:-

கொசஸ்தலை ஆறும், பக்கிங்காம் காய்வாயும் கலக்கும் இடம் எண்ணூர் கழிமுக பகுதி ஆகும். கடந்த முறை அங்கு உள்ள சில தனியார் நிறுவனங்கள் எண்ணூர் துறைமுகத்துடன் இணைந்து பக்கிங்காம் கால்வாயை தூர் வாரும் பணியை மேற்கொண்டது.

மாவட்ட நிர்வாகத்திற்கு வந்துள்ள ஒரு சில புகார்களின் அடிப்படையில் கடந்த வாரம் வருவாய் ஆர்.டி.ஓ. அந்த இடத்தில் நேரில் ஆய்வு நடத்தினார். அப்போது எந்த இடத்தில் நீர் அடைப்பு இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை கண்டறிந்து அதனை சீரமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இந்த பணி சரிவர நடைபெறுகிறதா? எனவும் தொடர்ந்து கண்காணிக்கப்படும். மேலும் இந்த பிரச்சினை குறித்து மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கும் தகவல் கூறப்பட்டு உள்ளது. அவர்கள் ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முற்றுகை

அதன் பின்னர் கலெக்டர் சுந்தரவல்லி கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டார். காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம், அவர்களுக்கு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை அவர் டாக்டர்களிடம் கேட்டறிந்தார். மேலும் சிகிச்சைக்காக காத்திருந்த நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

ஆய்வு முடித்து வெளியே வந்த கலெக்டர் சுந்தரவல்லியை பெண்கள் உள்பட 60 பேர் திடீரென முற்றுகையிட்டனர்.

அப்போது முற்றுகையில் ஈடுபட்டவர்கள், ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க போதிய டாக்டர்கள் இல்லை. மருந்துகள் கூட குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே தரப்படுகிறது. மருத்துவ பரிசோதனைக்கான கருவிகள் இருந்தும் அதற்கான ஊழியர்கள் நிரந்தரமாக நியமிக்கப்படவில்லை என புகார் கூறினர்.

நடவடிக்கை

டெங்கு காய்ச்சலை முன்னிட்டு கடந்த சில நாட்களாக மட்டுமே டாக்டர்கள் முழுமையாக பணியில் இருப்பதாகவும், இரவு பணிக்கான டாக்டர்கள் பணி நியமனம் செய்யப்படவில்லை எனவும் முழு நேர பணியில் டாக்டர்களை நியமிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கலெக்டரிடம் மேலும் வலியுறுத்தினர்.

இதற்கு பதில் அளித்த கலெக்டர் சுந்தரவல்லி, கடந்த 6-ந்தேதி முதல் இரவிலும் டாக்டர்கள் பணியில் உள்ளார்கள். அவ்வாறு இரவு நேரத்தில் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் இல்லை என்றால் எனது தெலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். உங்கள் புகார்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story